தற்கொலைக்கு வித்திட்ட லஞ்சம்.? 20 இடங்களில் அதிரடி சோதனை
பார் ஒப்பந்ததாரர் தீக்குளித்து உயிரிழந்த வழக்கில் புகாருக்குள்ளான, 10 காவல் அதிகாரிகளில், 7 பேரின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 20 இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். யாருக்கு எவ்வளவு மாமுல் கொடுக்கப்பட்டது என்பதை, காவல் ஆய்வாளர் ஒருவர், விசாரணையில் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நெல்லையப்பன் என்பவர், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே தங்கியிருந்து, டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைந்திருக்கும் பார்களை, ஒப்பந்த அடிப்படையில் எடுத்து நடத்தி வந்துள்ளார். தாம் வேறு ஒருவருக்கு கொடுத்த பணம் திரும்பி வராத காரணத்தாலும், கலால் உள்ளிட்ட பல்வேறு பிரிவு போலீசாருக்கும், டாஸ்மாக் மண்டல மேலாளருக்கும் கொடுத்த அதிகப்படியான லஞ்சம் காரணமாகவும், தொழிலில் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி, கடந்த மே மாதம், மாமல்லபுரம் டி.எஸ்.பி அலுவலக வளாகத்தில், நெல்லையப்பன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, தாம் யார், யாருக்கு எவ்வளவு லஞ்சம் தந்தேன் என்பதை வீடியோவாக பதிவு செய்து, தனது முகநூல் பக்கத்திலும் வெளியிட்டிருந்தார்.பார் ஒப்பந்ததாரர் நெல்லையப்பன், மாமுல் கொடுத்து மாய்ந்து போன விவகாரத்தில், தொடர்புடையதாக, காஞ்சிபுரம் மாவட்டம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையத்தில், அத்துறையின் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை அளித்த புகாரின்பேரில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன்படி, மாமல்லபுரம் முன்னாள் டி.எஸ்.பி சுப்புராஜ், திருப்போரூர் முன்னாள் காவல் ஆய்வாளர் கண்ணன், காஞ்சிபுரம் டாஸ்மாக் மண்டல முன்னாள் மேலாளர் அய்யாவு, காஞ்சிபுரம் மாவட்ட கலால் உதவி ஆணையர்கள் அகமத்துல்லா, பாலகிருஷ்ணன், காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு முன்னாள் ஏ.டி.எஸ்.பி மாணிக்கவேலு, காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி ரவிச்சந்திரன், கேளம்பாக்கம் முன்னாள் காவல் ஆய்வாளர் கண்ணன், மாமல்லபுரம் மதுவிலக்குப்பிரிவு முன்னாள் காவல் ஆய்வாளர் சிரஞ்சீவி, மதுராந்தகம் மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளர் ஆரோக்கியராஜ் ஆகிய 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக, வழக்கில் தொடர்புடைய, டாஸ்மாக் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், கலால் பிரிவு அதிகாரிகள் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 20 இடங்களில், கையூட்டு ஒழிப்புக் காவல்துறையினர், அதிரடி சோதனை நடத்தினர். காலையில் 6 மணிக்குத் தொடங்கிய சோதனை மாலை வரை, பல மணி நேரம் நீடித்தது. இந்த வகையில், காஞ்சிபுரம் டாஸ்மாக் மண்டல முன்னாள் மேலாளர் அய்யாவு என்பவரின், மேட்டூர் பகுதியில் உள்ள வீட்டிலும், ஓரிக்கைப் பகுதியில், அவர் பணியாற்றிய டாஸ்மாக் மண்டல அலுவலகத்திலும், தனித்தனியாக, 2 லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் அய்யாவு 15 லட்சம் ரூபாய்க்கு மேல், நெல்லையப்பனிடம் லஞ்சம் பெற்றதற்கான ஆவணங்களை, கையூட்டு ஒழிப்பு காவல்துறையினர் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.வழக்கில், முதல் நபராக சேர்க்கப்பட்டிருக்கும் மாமல்லபுரம் முன்னாள் டி.எஸ்.பி சுப்புராஜின், சென்னை பாலவாக்கம் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.இதேபோன்று, சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள உதவி ஆணையர் குடியிருப்பில் வசிக்கும், காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு முன்னாள் ஏ.டி.எஸ்.பி மாணிக்கவேலுவின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.மதுராந்தகம் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் ஆரோக்கியராஜின், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அவர் பணியாற்றும், மதுராந்தகம் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்திலும் சோதனை நடைபெற்றது. இருவேறு இடங்களிலும், முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதேபோன்று, காஞ்சிபுரம் மற்றும் திருக்கழுக்குன்றம் பகுதியில் இயங்கி வரும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையங்களிலும், லஞ்சம் ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதற்கிடையே, டிஎஸ்பி முதல் அதற்கு மேலான உயர் அதிகாரிகள் வரையில், யார், யாருக்கு எவ்வளவு தொகையை, டாஸ்மாக் பார் நடத்துவோரிடமிருந்து பெற்றுத் தந்தது பற்றி, லஞ்ச ஒழிப்பு காவல் விசாரணை வளையத்தில் இருக்கும், ஆய்வாளர் ஒருவர், தகவல்கள் ஆதாரங்களோடு அளித்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.