தமிழகத்தில் தமிழக அரசின் ஊழலை, நிர்வாக சீர்கேட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் பத்திரிகையாளர்கள் மீது பொய்வழக்கு போடுவதும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள், காவல்துறை அதிகாரிகள்

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக பத்திரிகையாளர்கள் மீது பொய்வழக்கு போடுவதும்ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.-க்கள் பத்திரிகையாளர்களை தாக்குவதும், அதிமுக அரசின் ஊழல்களை வெளியிடும் நிருபர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைப்பதும், குண்டர் சட்டத்தில் கைது செய்வது தினசரி நடந்துகொண்டு இருக்கிறது. தமிழகத்தில் பத்திரிகை ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசை விமர்சனம் செய்யும் பத்திரிகையாளர்கள் மீது அமைச்சர்களின் தூண்டுதலின் பேரில் காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பொய் வழக்கு போடப்படுகிறது. தமிழகத்தில் பத்திரிகை ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த நான்காண்டுகளில் ஆளுங்கட்சியினராலும் காவல்துறையினராலும் அமைச்சர் பின்னணியில் செயல்படும் கூலிப்படையினராலும் 50-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர், தமிழக காவல்துறை இயக்குநர் உள்ளிட்ட பல காவல்துறை உயரதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான அன்பழகன் அதிமுக அரசின் ஊழல்களை வெளியிட்டதால், அவரை 26.4.17-ல் பொய் வழக்கில் கைது செய்து, கோவையில் சிறையில் அடைத்தார்கள். அன்பழகன் மீது தொடர்ந்து 23 பொய் வழக்குகள் போடப்பட்டது. குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். 119 நாட்கள் கழித்து ஜாமீனில் வெளிவந்த அன்பழகன் மீது 19.12.18-ல் பூந்தமல்லியில் அவர் வீட்டின் அருகே, கோவை உக்கடம்வடவள்ளியிலிருந்து வந்த கூலிப்படையினர் துப்பாக்கியால் சுட்டார்கள். அன்பழகன் மயிரிழையில் உயிர் தப்பினார். காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேசிய மனித உரிமை ஆணையம் துப்பாக்கி சூடு தொடர்பாகவும், துப்பாக்கி சூட்டின் பின்னணியில் இருக்கும் அமைச்சர் மீது வழக்கு தொடருவது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால் தமிழக காவல்துறை இதுவரை விசாரணை கூட நடத்தவில்லை. 18.12.18-ல் நான்காவது பொய் வழக்கும் அன்பழகன் மீது போடப்பட்டுள்ளது. மேலும், 20.6.19-ம் தேதி இரவு 7.30 மணியளவில் அன்பழகன் பயணம் செய்த கார் மீது இரு சக்கர வாகனத்தை மோதி, அவரை தாக்க முயற்சி நடந்தது. அன்பழகன் மீது தாக்குதல் முயற்சி செய்தவர்களை பொதுமக்கள் பிடித்தனர். பூவிருந்தவல்லி காவலர் ஸ்ரீதர் வந்து, பொது மக்களால் பிடித்த நபரை காப்பாற்றி, பாதுகாப்பாக அனுப்பிவிட்டார். பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மூத்த பத்திரிகையாளர் அன்பழகன், தாக்குதல் நடந்த 30 நிமிடங்களில் ஆன்லைனில் புகார் கொடுத்தார். ஆன்லைன் புகார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை . 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி நிருபர் விமலேஸ்வரன் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் கோபிநாத்தால் தாக்கப்பட்டார். மேலும், விமலேஸ்வரன் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டார். விமலேஸ்வரன் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் ஆளும் கட்சியினராலும், காவல் துறையினராலும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது தினமும் நடந்து வருகிறது. 24-06-2019 திங்கட்கிழமை, ஈரோட்டில் உள்ள குமலன்குட்டை அரசுப்பள்ளியில், நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கம், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது தங்களுக்கு அரசின் லேப்டாப் வழங்கப்படவில்லை என மாணவர்களில் ஒரு பிரிவினர் சட்டமன்ற உறுப்பினர்களை முற்றுகையிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவர்களில் சிலருடன் வகுப்பறையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இந்த நிகழ்வுகளை செய்தி சேகரிக்க ஜூனியர் விகடன் நிருபர் நவீன், இந்து தமிழ் திசை நாளிதழ் நிருபர் கோவிந்தராஜ் ஆகியோர் அங்கு சென்றுள்ளனர். பேச்சுவார்த்தையின்போது மாணவர்கள் தங்களுக்கு லேப்டாப் வழங்கப்படாதது குறித்து பல கேள்விகளை எழுப்பினர். இதை பதிவு செய்து கொண்டிருந்த ஜூனியர் விகடன் நிருபர் நவீனை சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கத்தின் மகனும், ஈரோடு மாவட்ட அதிமுக மாணவரணிச் செயலாளருமான ரத்தன் பிரித்திவ், 'நீ யாரு, எதுக்கு வீடியோ எடுக்கிற. ஒழுங்கா வெளிய போறீயா, இல்லையா!' என ஏக வசனத்தில் மிரட்டியுள்ளார். தொடர்ந்து அங்கிருந்த இந்து தமிழ் திசை செய்தியாளர் கோவிந்தராஜை கடுமையான வார்த்தைகளில் திட்டையபடி கன்னத்தில் அறைந்து கீழே தள்ளியுள்ளார். அ.தி.மு.க.-வைச் சேர்ந்த பலர் ஜூனியர் விகடன் நிருபர் நவீனை சட்டையைப் பிடித்துத் தள்ளி, நெஞ்சில் ஓங்கி குத்தி போனை பிடுங்கி, கீழே தள்ளி தாக்கியுள்ளனர், பத்திரிகையாளர்கள் மீதான இந்த மோசமான தாக்குதலை ஈரோடு டவுன் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் ஆய்வாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட காவல்துறையினர் வேடிக்கை பார்த்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்னர் ஒரு கட்சித்தலைவர், 'கேள்வி கேட்டால், கேள்வி கேட்பவரை வெட்டுவேன்' என்கிறார், இன்றைக்கு ஈரோட்டிலோ ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் அரசு நிகழ்சிக்கு சம்மந்தமில்லாத ரத்தன் பிரித்திவ் என்ற நபர் காட்டுமிராண்டித்தனமாக செய்தியாளர்களை தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் ஈரோடு அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவது, தாக்கப்படுவது, பொய்வழக்குகள் போடப்படுவது, கைது செய்யப்படுவது, என கொடூரங்கள் அதிகரித்து வருகிறது. பத்திரிகையாளர்களை மிரட்டுவது, தாக்குதல்கள் நடத்துவது, பொய் வழக்குகள் போடுவது பத்திரிகை ஜனநாயகத்தின் கழுத்தை நெறிக்கும் செயலாகும். மேதகு ஆளுநர் அவர்கள் தமிழகத்தில் பத்திரிகையாளர் ஜனநாயகத்தை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேதகு ஆளுநர் அவர்கள், தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது, மிரட்டப்படுவது, அதிமுக அரசின் ஊழல்களை செய்தி வெளியிட்டவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தது, குண்டர் சட்டத்தில் கைது செய்தது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விரிவான விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)