ஒருவர் மீது F.I.R நிலுவையில் உள்ளது என்று கூறி பாஸ்போர்ட் வழங்காமல் இருக்கக் கூடாது- மதுரை உயர்நீதிமன்றம்!


  1. இந்த வழக்கில் சுப்பையா என்பவர் தனக்கு பாஸ்போர்ட் வழங்குமாறு கோரி ஒரு விண்ணப்பத்தை மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலரிடம் தாக்கல் செய்தார். அந்த விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட மண்டல கடவுச்சீட்டு அலுவலர், அதனை காவல்துறைக்கு அனுப்பி சுப்பையா மீது ஏதேனும் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதா? என்பது குறித்து அறிக்கை தரும்படி கோரியிருந்தார். அதற்கு காவல்துறையினர் சுப்பையா மீது குற்ற எண். 351/2012 என்ற வழக்கு நிலுவையில் உள்ளதாக பதில் அனுப்பினர்.அந்த அறிக்கையை பெற்றுக் கொண்ட மண்டல கடவுச்சீட்டு அலுவலர் சுப்பையாவிடம் விளக்கம் கேட்டு ஒரு அறிவிப்பினை 18.3.2017 ஆம் தேதி அனுப்பினார். அந்த அறிவிப்புக்கு சுப்பையா 21.3.2017 ஆம் தேதி கீழ்க்கண்டவாறு ஒரு விளக்கத்தை அளித்தார். " என் மீது குற்ற எண் 351/2012 என்ற எண்ணின் கீழ் வழக்கு இருப்பது உண்மை. ஆனால் அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. மேற்கண்ட வழக்கில் இறுதி அறிக்கை எதையும் காவல்துறையினர் தாக்கல் செய்யவில்லை. மேற்படி வழக்கு கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் போடப்பட்ட வழக்கு. என்மீது மட்டுமல்லாமல் பலர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. ஆனால் அந்த வழக்குகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது" என்று கூறியிருந்தார். ஆனால் சுப்பையாவின் விளக்கத்தை ஏற்று பாஸ்போர்ட் வழங்க மண்டல கடவுச்சீட்டு அலுவலர் மறுத்து விட்டார். அதனால் தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்பையா இந்த மனுவை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுப்பையா மீது குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது என காவல்துறையினர் அறிக்கை அளித்துள்ளதால் பாஸ்போர்ட் வழங்க முடியாது என்றும், குற்ற வழக்கு முடிவடைந்த பின்னர் சுப்பையா மண்டல கடவுச்சீட்டு அலுவலரை அணுகினால் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று கூறினார். வழக்கை விசாரித்த நீதிபதி, மதுரை உயர்நீதிமன்றம் " M. ஜெய்கர் வில்லியம் Vs தமிழ்நாடு அரசு (2014-2-CWC-684)" என்ற வழக்கில், ஒருவர் மீது FIR பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதற்காகவே அவர்மீது குற்றவியல் நடவடிக்கை நிலுவையில் உள்ளதாக கருதிவிட முடியாது. அந்த வழக்கில் புலன் விசாரணையை முடித்து காவல்துறையினரால் தாக்கல் செய்யப்படும் இறுதி அறிக்கையை குற்றவியல் நடுவர் நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருவர் மீது குற்றவியல் நடவடிக்கை நிலுவையில் இருப்பதாக கருத வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது. மேலும் மேற்படி வழக்கின் தீர்ப்பு பத்தி 10 ல் " ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றத்தால்" மத்துமாரி சின்ன வெங்கிட்ட ரெட்டி மற்றும் பலர் Vs ஆந்திர பிரதேச அரசு (1994-CRLJ-257)" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டி, ஒரு வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாத வரை, எந்தவொரு குற்றச் செயலையும் விசாரிப்பதற்காக, நீதிமன்ற கோப்பிற்கு அந்த வழக்கை ஏற்றுக் கொண்டதாக கருத முடியாது, அவ்வாறு ஒரு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதனை நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக் கொண்டு எதிரிக்கு அழைப்பாணை அனுப்பப்படும் நிலையை அந்த வழக்கு எட்டும் வரை, அந்த வழக்கில் புலன் விசாரணையை கட்டுப்படுத்துகிற நபராகத்தான் ஒரு குற்றவியல் நடுவர் செயல்பட்டு வருகிறார் என்று தீர்ப்பு கூறியுள்ளது. காவல்துறையினரால் தாக்கல் செய்யப்படும் இறுதி அறிக்கை சரியாக இருக்கும் போது தான் நீதிமன்ற நடவடிக்கை ஆரம்பமாகிறது. அதன் பின்னர், அத்தியாயம் 16 ல் கூறப்பட்டுள்ளவாறு நடவடிக்கைகளை குற்றவியல் நடுவர் மேற்கொள்ள ஆரம்பிக்கிறார். ஒர் இறுதி அறிக்கை எதிரிகளுக்கு தர வேண்டிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அந்த இறுதி அறிக்கை நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தாலும், அந்த இறுதி அறிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்துவிட்டதாக கருத முடியாது. அந்த இறுதி அறிக்கையை நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக்கொண்டு அத்தியாயம் 16 ல் கூறப்பட்டுள்ளவாறு அழைப்பாணை அனுப்பப்பட்டால் மட்டுமே குற்றவியல் நடுவர் தன்னுடைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என்று கருத வேண்டும். எனவே ஒரு வழக்கில் புலன் விசாரணை முடித்து, ஓர் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர் என்பதால், அந்த வழக்கு எதிரி மீது குற்றவியல் நடவடிக்கை நிலுவையில் உள்ளதாக கருத முடியாது. அந்த இறுதி அறிக்கையை குற்றவியல் நடுவர் நீதிமன்ற கோப்பிற்கு ஏற்றுக்கொண்டு அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிக்கு அழைப்பாணை அனுப்பி இருந்தால் மட்டுமே அந்த எதிரி மீது குற்றவியல் நடவடிக்கை நிலுவையில் இருப்பதாக கருத முடியும். எனவே ஒருவர் மீது FIR பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதற்காகவே அவருக்கு பாஸ்போர்ட் வழங்க முடியாது என மண்டல கடவுச்சீட்டு அலுவலர் மறுக்க முடியாது என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. W. P. NO - 6881/2017, DT - 28.4.2017 சுப்பையா வேலாக் கண்ணுசாமி Vs மண்டல கடவுச்சீட்டு அலுவலர், மதுரை மற்றொருவர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)