ஆதம்பாக்கம் பார்த்தசாரதி நகரில் தனிநபருக்காக முடங்கிய குடிநீர் திட்டம்

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் பார்த்தசாரதி நகரில் பொதுமக்களின் தேவைக்காக பல லட்சத்தில் செயல்படுத்தப்பட்ட குடிநீர் திட்டத்தை தனிநபர் ஒருவருக்காக அதிகாரிகள் முடக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆதம்பாக்கம், பார்த்தசாரதி நகர், 11வது தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார் அறை, சின்டெக்ஸ் தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தனியார் ஒருவருக்கு சாதகமாக, கடந்த 6 மாதங்களுக்கு முன், ஆலந்தூர் குடிநீர் வாரிய அதிகாரிகள், நன்றாக செயல்பட்டு வந்த இந்த குடிநீர் தொட்டி மற்றும் மின் மோட்டார் அறையை இடிக்க ஆரம்பித்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அங்கு வந்த குடிநீர் வாரிய பெண் அதிகாரி, ''இந்த தண்ணீர் தொட்டியினை 10 அடி தூரம் தள்ளி அமைத்து, யாருக்கும் இடையூறு இல்லாதபடி, ஏற்கனவே இருக்கும் போர்வெல் மூலமே குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும்,'' என உறுதி அளித்தார். இதனை நம்பிய பொதுமக்கள் தண்ணீர் தொட்டி அறையை இடிப்பதற்கு அனுமதித்தனர். இதனையடுத்து தண்ணீர் தொட்டி அறை இடிக்கப்பட்டது. பின்னர், உறுதி அளித்தபடி புதிய குடிநீர் தொட்டியும் கட்டப்பட்டது. ஆனால், ஆழ்துளை கிணற்றில் இருந்து தொட்டிக்கு பைப்லைன் அமைக்கவில்லை. தற்போது, தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதால், உடனடியாக பைப்லைன் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் குடிநீர் வாரியத்திடம் முறையிட்டனர். ஆனால், அதிகாரிகளோ அந்த ஆழ்துளை கிணறு இனிமேல் வேலை செய்யாது என தட்டிக்கழிப்பதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இந்த குடிநீர் தொட்டியை தனியார் ஒருவருக்காக, இடித்து விட்டனர். அதற்கு பதிலாக வேறொரு தண்ணீர் தொட்டி கட்டிய பின்பும் தண்ணீர் வழங்காமல் ஆழ்துளை கிணறை தூர்ந்து போகும்படி செய்து விட்டனர். தனிப்பட்ட ஒருவருக்கு அதிகாரிகள் விலைபோனதால் தண்ணீர் இன்றி நாங்கள் அவதிப்படுகிறோம். எனவே, ஆழ்துளை கிணற்றில் இருந்து தொட்டிக்கு பைப்லைன் அமைத்து தண்ணீர் வழங்க குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்