வாக்களிக்க பஸ் வசதி இல்லாததால் சரக்கு வாகனத்தில் வாக்களிக்கச் செல்லும் கிராம மக்கள்

 வாக்களிக்க போக்குவரத்து வசதி இல்லாததால் அரசியல் கட்சியினர் உதவியுடன் சரக்கு வாகனத்தில் கிராம மக்களை ஏற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.


காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தின் அருகே உள்ள முத்துவேடு கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். அந்த கிராம மக்களுக்கு வாக்குச்சாவடி மையம் பெரும்பாக்கத்தில் அமைந்துள்ளது.

இந்நிலையில் முத்துவேடு கிராமத்திலிருந்து பெரும்பாக்கம் செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பெரும்பாக்கம் கிராமத்திற்கு கடும் வெயிலில் நடந்து சென்றுதான் வாக்களிக்கும் நிலை இருக்கிறது.

கிராமத்தில் உள்ள வயதானவர்கள் மற்றும் பெண்களை சில அரசியல் கட்சியினர் சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பெரும்பாக்கத்தில் இருக்கும் வாக்குச்சாவடி மையத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.

சரக்கு வாகனம் ஏற்பாடு செய்த காரணத்தால் அக்கட்சியினர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்றுக் கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.