தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 5 லட்ச ரூபாய் அபராதமும்
மணல் ஆலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில், வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜனுக்கு, டெல்லி சிபிஐ நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திருவெம்பாலபுரத்தில், கடற்கரைப் பகுதியில் மணல் ஆலை அமைப்பதற்காக, 2012ம் ஆண்டு மத்திய சுகாதாரத்துறை இணை இயக்குநர் நீரஜ் கட்கரிக்கு, வைகுண்டராஜன் நான்கு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்ற வழக்கின் விசாரணை கடந்த ஜனவரி 19ந்தேதி முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த டெல்லி சிபிஐ நீதிமன்றம், வைகுண்ட ராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தது. மத்திய அரசு அதிகாரி நீரஜ் கட்கரிக்கு 5 ஆண்டுகள் சிறையும், வைகுண்டராஜனின் அலுவலக உதவியாளர் சுப்புலட்சுமிக்கு மூன்று ஆண்டு சிறையும் விதிக்கப்பட்டது. முதல் குற்றவாளியான அரசு அதிகாரி நீரஜ் கட்ரிக்கு 5 ஆண்டுகள் சிறையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கவும் வைகுண்டராஜன் தரப்பில் வாதாடப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.