சூப்பர் மார்க்கெட்டில் தாக்குதல்.. பொருட்கள் கொள்ளை.. பாஜகவைச் சேர்ந்த 10 பேர் உட்பட 21 பேரிடம் விசாரணை

சென்னை ஆயிரம் விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில் ஷாநவாஸ் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்த சூப்பர் மார்க்கெட் ரஃபீகா என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இருவருக்கும் வாடகை தகராறு ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


கடையை காலி செய்யக் கூறி ரஃபீகா அடிக்கடி கடைக்கு வந்து தகராறு செய்ததாக தெரிகிறது. ஒப்பந்தப்படி கடையை காலி செய்ய 2 வருடங்கள் கால அவகாசம் இருப்பதாகவும், இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதையும் சுட்டிக்காட்டி கடையை காலி செய்ய மறுத்துள்ளனர். இவர்களுக்கிடையே கடந்த சில ஆண்டுகளாக பிரச்னை இருந்து வந்த நிலையில் வியாழக்கிழமை காலை ஊழியர்கள் வந்து கடையை திறந்தனர்.


கொஞ்ச நேரத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கடைக்குள் நுழைந்து சுத்தியல், ஸ்பேனர் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை அடித்து நொறுக்கி பொருட்களை சூறையாட தொடங்கியுள்ளனர்.


பின்னர் சூறையாடிய பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஒரு டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். கடையில் இருந்த 6 ஊழியர்களில் ஒருவரான குதூப், ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டபோது அவரை தள்ளிவிட்டு, வாடிக்கையாளர்களை வெளியே செல்லுமாறு மிரட்டி உள்ளனர். இந்த திடீர் தாக்குதலால் நெஞ்சுவலி ஏற்பட்ட ஊழியர் குதூப்பை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மற்ற ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


போலீசார் வருவதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட சிலர் சூறையாடிய பொருட்களோடு தப்பி சென்றுவிட, கடைக்குள் இருந்த 21 பேரை மட்டும் காவல்துறையினர் பிடித்து ஆயிரம் விளக்கு காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பாஜகவின் ஊடகப்பிரிவு, கலை இலக்கிய பிரிவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.


இவர்கள் யாருடைய தூண்டுதலின் பேரில் இந்த செயலில் ஈடுபட்டனர், ரஃபீகாவுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தாக்குதல் சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி.காட்சிகள் சிக்கி விடக்கூடாது என்ற நோக்கத்தில் கடையை சூறையாடிய கும்பல் சி.சி.டி.வி. டி.வி.ஆரை எடுத்து செல்வதற்கு பதிலாக கணினி சி.பியூ.வை திருடி சென்றதால், சி.சி.டி.வி. டி.வி.ஆர் போலீசாரிடம் சிக்கியுள்ளது. இதனால் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)