500 ரூபாய்க்கு அரை மணிநேரத்தில் இ-பாஸ் ரெடி; ஆடியோ மெசேஜ் பரபரப்பு!!

கரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக மாவட்டம் விட்டு மாவட்டம் வாகனங்கள் மூலம் செல்வதற்கு இ- பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. உரிய காரணங்கள் தெரிவித்து இ-பாஸ் பெறுவதற்கு பல்வேறு கெடுபிடிகள் நடைமுறையில் உள்ளன.


இந்த நிலையில் கடலூரில் ஒருவர் 500 ரூபாய் கொடுத்தால் அரை மணி நேரத்தில் இ-பாஸ் தருவதாக கூறிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ஒருவர் 500 ரூபாய் கொடுத்தால் அரை மணி நேரத்தில் இ-பாஸ் எடுத்து தருவதாகவும், இதேபோல் இதுவரை 50,000 இ-பாஸ்கள் எடுத்து தந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


மேலும் அவர் இ-பாஸ் எடுக்க தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று கூறி தனது செல்போன் நம்பரையும் கொடுத்துள்ளார். ஏற்கனவே பல முக்கிய நிகழ்வுகள், அவசிய தேவைகளுக்காக இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தவர்கள் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் இவ்வாறு 500 ரூபாய்க்கு அரை மணி நேரத்தில் எடுத்து வருவதாகவும், இதுவரை 50 ஆயிரம் பேருக்கு எடுத்து கொடுத்துள்ளதாகவும் ஒருவர் பேசிய ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபற்றி தகவலறிந்ததும் விரிவான விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.


கடலூர் சாவடி பகுதியை சேர்ந்த ராஜாராமன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜாராமனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.