தமிழ்நாடு தேசியக் கொடியை அவமதித்ததாக எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு

நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகர் மீது தேசிய கொடியை அவமதித்ததாக சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகள் மீது காவிச்சாயம் பூசி அவமதித்த சம்பவங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டித்தார்.


இதையடுத்து எஸ்.வி சேகர் வெளியிட்ட வீடியோவில், காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர், காவி நிறம் உள்ளதால் களங்கமான தேசியக் கொடியைத் தான் ஆகஸ்டு 15-ஆம் தேதி ஏற்றப்போகிறாரா என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.


இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர், ஆன்லைன் மூலம் சென்னை சைபர் கிரைம் பிரிவில் எஸ்.வி சேகர் மீது புகாரளித்தார்.


இந்த நிலையில், எஸ்.வி. சேகர் மீது தேசிய கொடியை அவமதித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.