பக்ரீத் பண்டிகை : திருவாரூரில் அனுமதியின்றி தொழுகை நடத்திய 250 பேர் மீது வழக்குப்பதிவு

திருவாரூரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அனுமதியின்றி தொழுகை நடத்திய 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக தங்களது வீடுகளிலேயே கொண்டாடி வருகின்றனர்.


மசூதிகள் மற்றும் பொது இடங்களில் ஒன்று கூடி தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவாரூர் அருகே கொடிக்கால்பாளையம் நடுத்தெருவில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமுமுக இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சிறப்பு தொழுகை செய்தனர்.


இதேப்போன்று அடியக்கமங்கலம் ஒத்தக்கால் தெருவில் அமைப்புசாரா தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.


இதன் காரணமாக ஊரடங்கை மீறி ஒரே இடத்தில் கூட்டம் கூடுதல், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை பரப்பும் விதமாக நடந்து கொண்டது, காவல்துறையின் விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட 3 பிரிவின்கீழ் திருவாரூர் நகர காவல்துறை மற்றும் திருவாரூர் காவல்துறையினர் இஸ்லாமியர்கள் 250 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.