தெலங்கானா: ரூ.1 கோடி லஞ்ச பணத்துடன் பிடிபட்ட தாசில்தார்

தெலங்கானாவில் தாசில்தார் ஒருவர் ரூ.1 கோடி லஞ்ச பணத்துடன் கையும் களவுமாக பிடிபட்டார். தெலங்கானாவின் கேசரமண்டால் எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் உள்ள 28 ஏக்கர் நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று அங்குள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது.


இதனை தங்கள் பக்கம் மாற்றுவதற்காக ஒரு ரியல் எஸ்டேட் குரூப் தாசில்தார் பாலராஜு நாகராஜுவை நாடியுள்ளனர். இதனை முடித்துக் கொடுக்க அவர் 2 கோடி லஞ்சம் கேட்டுள்ளார்.


ரியல் எஸ்டேட் குரூப் சரியென தலையசைக்க ஒரு கோடி ரூபாய் பணம் கைமாறியுள்ளது. இந்த விவரம் ஊழல் தடுப்பு குழுவினருக்கு தெரிய வந்துள்ளது.


உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள தாசில்தாரின் வாடகை வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் கைமாறிய ரூ.1 கோடியை அதிகாரிகள் கைப்பற்றினர்.


மேலும் தாசில்தாரின் வீட்டில் இருந்த ரூ,28 லட்சத்தையும் அவர்கள் மீட்டனர். மேலும் நகைகள் மற்றும் லாக்கர் சாவியையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.


இது தொடர்பாக ரியல் எஸ்டேட்டைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலங்கானாவில் ரியல் எஸ்டேட் மாபியாக்கள் அதிகம் செயல்படுவதாகவும், இதனால் அங்குள்ள தாசில்தார்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


2019ம் ஆண்டு பெண் தாசில்தார் ஒருவர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கொலைக்கும் ரியல் எஸ்டேட் மாபியாக்களே காரணம் என்றும் கூறப்பட்டது.