காரில் நூதன திருட்டு..எப்போதும் தேவை எச்சரிக்கை..!

வாகனஓட்டிகள் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருந்தாலும் ஏமாற்றுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதை டெல்லியில் கடந்த 21ந்தேதி நிகழ்ந்துள்ள திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சி உணர்த்தியுள்ளது.


டெல்லியின் நொய்டா பகுதியில் பிரதான சாலையையொட்டிய சிறிய சாலையில் வரும் காரின் இடதுபக்கம் ஹெல்மெட் அணிந்து இருசக்கரவாகனத்தில் வந்த இருவர் காரை முந்திச் சென்று ஏதோ கூறியபடி சென்றுவிட கார் நிறுத்தப்படுகிறது.


டிரைவர் இருக்கையில் இருந்து இறங்கியவர் காரின் முன் டயரை பார்க்கச் செல்கையில், அதே பகுதியில் மற்றொரு இருசக்கரவாகனத்தில் வந்த இருவர் அவரது கவனத்தை காரைவிட்டுத் திருப்பி பேச்சு கொடுக்கின்றனர்.


இந்நிலையில் அந்தப்பகுதியில் ஏற்கனவே தயாராக நின்று மர்ம நபர், டிரைவர் இருக்கையின் பின்பகுதி கதவைத் திறந்து அதிலிருந்த பொருளை எடுத்துச் செல்கிறான்.


இதைப்பார்த்த அங்கிருந்த ஒருவர் குரல் கொடுத்து அவனை பிடிக்க முற்படுகையில் அந்த மர்மநபரை ஏற்கெனவே நிறுத்திச் சென்ற இருசக்கரவாகன ஓட்டி அவனை மீட்டுச் செல்வதாய் காட்சிகள் பதிவாகியுள்ளது.


42நொடிகளுக்குள் பட்டப்பகலில் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு திருட்டின் சிசிடிவி காட்சி வாகனஓட்டிகள் இன்னும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளது.