கட்சியில் சேர்ந்த 10 நாட்களில் முதல்வர் வேட்பாளர் - ஸ்ரீதரனை களமிறக்கும் பாஜக


இந்தியாவின் பிரபல பொறியியல் வல்லுநர் ஸ்ரீதரன். டெல்லியில் மெட்ரோ திட்டத்திற்குத் தலைமை வகித்தவர். மேலும் கொச்சி, லக்னோ ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மெட்ரோவிற்கு ஆலோசகராகப் பணியாற்றியவர்.

 இவ்வாறு மெட்ரோ திட்டங்களில் திறம்பட செயலாற்றியதால், இவர் ‘மெட்ரோ மனிதன்’ என அழைக்கப்படுகிறார். 1964 ஆம் ஆண்டு, புயலால் சேதமடைந்த பாம்பன் பாலத்தைச் சீரமைத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி, அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார். இந்தநிலையில், கேரளாவில் ஏப்ரல் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

ஸ்ரீதரன் கட்சியில் சேரும்போதே அவர் முதல்வர் வேட்பாளராக களமிறங்கலாம் என தகவல்கள் வெளியாகின. அதுபோலவே அவர் தற்போது பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பினை மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் வெளியிட்டுள்ளார். ஸ்ரீதரன் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்து 10 நாட்கள் கூட முடிவடையாத நிலையில், அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.