சீண்டிய ராஜேஷ் தாஸ்... பதறிய பெண் ஐ.பி.எஸ்!

 


தழகத்தில்தான் காவல்துறையின் உச்ச பதவியிலிருந்த போலீஸ் டி.ஜி.பி ராஜேஷ் தாஸிடம் அரை மணி நேரத்துக்கும் அதிகமாக பாலியல் தொல்லையில் சிக்கி, தவியாகத் தவித்திருக்கிறார் பெண் எஸ்.பி ஒருவர். அந்தப் பெண் அதிகாரியைக் காப்பாற்ற எந்தவொரு போலீஸ் அதிகாரியும் வராததுடன், இரண்டு நாள்களாக விவகாரத்தை மூடி மறைக்க முயற்சி செய்ததன் மூலம் தலைகுனிந்து நடைபோட்டிருக்கிறது தமிழக அரசு.

யார் இந்த ராஜேஷ் தாஸ்?

தற்போதைய பாலியல் அத்துமீறல் விவகாரத்தைப் பார்ப்பதற்கு முன்பு ராஜேஷ் தாஸின் கடந்தகால சர்ச்சைகளைப் பார்ப்போம்... ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் தாஸ், 1989 பேட்ச் தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி. தூத்துக்குடியில் ஏ.எஸ்.பி-யாகப் பணியைத் தொடங்கியவர் தூத்துக்குடி, தேனி, திருவள்ளூர் மாவட்டங்களில் எஸ்.பி-யாகவும், சென்னை புறநகர் கமிஷனராகவும், தென்சென்னை கூடுதல் கமிஷனராகவும் பணிபுரிந்தார். 2012-ம் ஆண்டு இவர் தென்மண்டல ஐ.ஜி-யாக இருந்த காலகட்டத்தில்தான் முல்லைப்பெரியாறு பிரச்னை, கூடங்குளம் பிரச்னை, பரமக்குடி கலவரம் என்று தென் தமிழகம் தகித்தது. அவற்றையெல்லாம் சரியாகக் கையாளவில்லை என்பதால், சென்னைக்கு மாற்றப்பட்டார்.

நேர்மையான ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலர் ராஜேஷ் தாஸ் பற்றிய கடந்தகால சர்ச்சைகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டனர். ‘‘தமிழக காவல்துறையில் டி.ஜி.பி-யாகப் பணியாற்றிய வெங்கடேசன், அவ்வப்போது இளம் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்குத் தனது வீட்டில் பார்ட்டி கொடுப்பது வழக்கம். 1990-களின் தொடக்கத்தில் அப்படியொரு பார்ட்டிக்கு ராஜேஷ் தாஸ் சென்றபோதுதான், வெங்கடேசனின் மகள் மருத்துவர் பீலாவுடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. பீலாவைக் காதலித்து, கரம் பிடித்தார் ராஜேஷ் தாஸ். திருமணத்துக்குப் பிறகு கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கவும், ‘நானும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகிக் காட்டுகிறேன் பார்’ என்று டெல்லிக்குச் சென்று ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்று, 1997-ல் பீகார் கேடரில் ஐ.ஏ.எஸ் பதவியில் அமர்ந்தார் பீலா.

2001-ல் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், பீகாரிலிருந்து தமிழக கேடருக்கு தற்காலிக மாறுதலான பீலா ராஜேஷ், முதல்வர் தனிப்பிரிவுக்குப் பொறுப்பேற்றார். அந்தச் சமயத்தில்தான், பெண் டி.எஸ்.பி ஒருவர் ராஜேஷ் தாஸ் மீது எழுப்பிய பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிரடியாக ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் செய்தார் ஜெயலலிதா. 2005-ல்தான் ராஜேஷ் தாஸுக்குப் பதவி வழங்கப்பட்டது.

*அழகிகள் மசாஜ்!*

தண்டனைக்கு பிறகும் திருந்தவில்லை ராஜேஷ் தாஸ். தற்போது ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறையில் பணியாற்றும் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர், வட மாவட்டம் ஒன்றில் ராஜேஷ் தாஸ் எஸ்.பி-யாகப் பணிபுரிந்தபோது, டி.எஸ்.பி-யாக இருந்தார். அவரிடமும் ராஜேஷ் தாஸ் சில்மிஷத்தைக் காட்ட, அவர் வெகுண்டெழுந்து அடி புரட்டியெடுத்துவிட்டார். இந்த விவகாரம் புகார் ஆகாமல் அப்படியே அமுக்கப்பட்டது. அமலாக்கப்பிரிவில் ராஜேஷ் தாஸ் பணியாற்றியபோது, தி.நகர் விஜயராகவா சாலையிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்திருந்தார். வாரத்துக்கு மூன்று நாள்கள், மதிய உணவு நேரத்தில் அங்கு வந்துவிடுவார். சிறிது நேரத்திலேயே அழகிகள் இருவர் பொலீரோ ஜீப்பில் வந்திறங்குவார்கள். சுமார் இரண்டு மணி நேரம் அழகிகள் இருவரும், ராஜேஷ் தாஸுக்கு மசாஜ் செய்து மகிழ்விப்பார்கள்.

அந்தச் சமயத்தில்தான், கையில் மது பாட்டிலுடன் வெறும் துண்டைக் கட்டியபடி அழகிகளுடன் அவர் ஆடிய ஆட்டமெல்லாம் சில போலீஸ் அதிகாரிகளால் வீடியோவாக எடுக்கப்பட்டது. ஆனால், தனது செல்வாக்கால் அந்த வீடியோக்களை அமுக்கிவிட்டார் ராஜேஷ் தாஸ். இவர்களின் குத்தாட்டத்தால் நொந்துபோன வீட்டின் உரிமையாளர், முதல்வர் தனிப்பிரிவு வரை போராடியும் பலனில்லை. ஒருவழியாக தனது சமூகம் சார்ந்த தலைவர்கள் மூலமாகச் சமாதானம் பேசி வீட்டை மீட்டார் அதன் உரிமையாளர்’’ என்றவர்கள், ராஜேஷ் தாஸின் முன்யோசனையில்லாத திட்டங்களால் ஏற்பட்ட விபரீதங்களையும் விவரித்தார்கள்...

*துப்பாக்கி மிஸ்ஸிங்!*

‘‘1990-களில் தூத்துக்குடியில் வெங்கடேச பண்ணையாருக்கும் பசுபதி பாண்டியனுக்கும் இடையே கடும் மோதல் இருந்தது. பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் கர்ணனைத் தீர்த்துக்கட்டுவதற்காக ஆறுமுகநேரி பக்கம் வெங்கடேச பண்ணையார் பதுங்கியிருப்பதாக போலீஸுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பதுங்கிச் சென்று சுற்றிவளைத்து அவரைக் கைதுசெய்ய திட்டமிடப்பட்டது. அப்போது தூத்துக்குடியில் பணியாற்றிய ராஜேஷ் தாஸ் சக அதிகாரிகளின் ஆலோசனையைக் கேட்காமல், ‘வடிவேலு’ பாணியில் தன்னந்தனியாக முட்புதர் காட்டுக்குள் புகுந்தார்.

பண்ணையார் குரூப் அங்கிருந்ததா என்று தெரியவில்லை. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் கெரில்லா பாணியில் ராஜேஷ் தாஸை மடக்கிப் பிடித்த ரெளடிகள் சிலர், கையை முறுக்கி சரமாரியாகத் தாக்கினார்கள். அவரது துப்பாக்கி அங்கேயே விழுந்துவிட்டது. அவருக்குப் பின்பக்கமாக அரிவாளில் பெரிய கீறலாகப் போட்டு அனுப்பிவைத்தார்கள். ஒருவழியாக மறுநாள் சென்று துப்பாக்கியை மீட்டெடுத்தனர் போலீஸார்.

கூடங்குளம் அணுமின் நிலையம் பிரச்னை பெரிதானபோது, தென்மண்டல ஐ.ஜி-யாகப் பணியிலிருந்தார் ராஜேஷ் தாஸ். ‘கடல் மார்க்கமாக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வருகிறார்கள்; கூடுதல் பாதுகாப்பு படையினர் வரும் வரை நிதானமாகப் பேச்சுவார்த்தை நடத்தியபடி இருப்போம்’ என்று நெல்லை சரக டி.ஐ.ஜி வரதராஜுலுவும், நெல்லை எஸ்.பி விஜயேந்திர பிதாரியும் எச்சரித்தார்கள். அவர்கள் சொன்னதுபோலவே கடல் மார்க்கமாகப் போராட்டக்காரர்களும் வந்திறங்கினார்கள். வழக்கம்போல துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு கடற்கரையை நோக்கி ஓடிய ராஜேஷ் தாஸ், வானத்தை நோக்கிச் சுட ஆரம்பித்தார். கூட்டம் சிதறி ஓடிவிடும் என்று நினைத்தவரை நோக்கி, கடலலைபோல சீறிவரத் தொடங்கினார்கள் போராட்டக்காரர்கள். கையில் கிடைத்த பொருள்களால் போலீஸாரைத் தாக்கத் தொடங்கியது கூட்டம். ராஜேஷ் தாஸை மணலில் போட்டு புரட்டியெடுத்தவர்கள், அவரது துப்பாக்கியையும் பிடுங்கிக்கொண்டு சென்றுவிட்டனர். ஒருவழியாக போராட்டக் குழுவினரின் தலைவர் ஒருவரைப் பிடித்து போலீஸார் துப்பாக்கியை மீட்டார்கள்’’ என்று பெருமூச்சுவிட்டார்கள்!

சீண்டிய ராஜேஷ் தாஸ்... பதறிய பெண் ஐ.பி.எஸ்!

இப்படிப் பலரையும் டார்ச்சர் செய்து கொட்டமடித்த ராஜேஷ் தாஸ்தான், இப்போது பாலியல் புகாரில் வசமாகச் சிக்கிக்கொண்டிருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலர், ‘‘பிப்ரவரி 21-ம் தேதி டெல்டா மாவட்டம் ஒன்றில் நடைபெற்ற விழாவுக்காக முதல்வர் பழனிசாமி சென்றிருந்தார். முதல்வருக்கு பிப்ரவரி 22-ம் தேதி கள்ளக்குறிச்சியிலும் விழுப்புரத்திலும் நிகழ்ச்சிகள் இருந்ததால், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக உடன் சென்றிருந்த ராஜேஷ் தாஸ், விழுப்புரம் நோக்கிப் பயணமானார். சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி சாலை மார்க்கமாகப் பயணிக்கும்போது, அந்தந்த மாவட்ட எஸ்.பி-க்கள் மரியாதை நிமித்தமாக வழியில் சந்திப்பது வழக்கம். அந்தவகையில், ராஜேஷ் தாஸுக்கு மரியாதை செலுத்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரியும் வழியில் காத்திருந்தார்.

பெண் ஐ.பி.எஸ் அதிகாரியைக் கண்டவுடன் காரை நிறுத்திய ராஜேஷ் தாஸ், ‘என் கார்ல வாம்மா. சட்டம் - ஒழுங்கு பத்தி பேசணும்’ என்று சொல்லியிருக்கிறார். பெண் அதிகாரி காரில் ஏறியவுடன், கார் உளுந்தூர்பேட்டை நோக்கி நகர்ந்திருக்கிறது. பொதுவாகப் பேச்சுக் கொடுத்தவர், மெதுவாக அந்தப் பெண்ணைப் பற்றி உடல்ரீதியாக கமென்ட் அடித்திருக்கிறார். தொடர்ந்து, பாலியல்ரீதியாகவும் அத்துமீறியிருக்கிறார். கடும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்த அந்தப் பெண் அதிகாரி, ராஜேஷ் தாஸின் கைகளைத் தட்டிவிட்டுத் திட்டியிருக்கிறார். அப்போதும் அலட்டிக்கொள்ளவில்லை ராஜேஷ் தாஸ். சுமார் அரை மணி நேரம் இப்படியே கழிந்திருக்கிறது. அதற்குள் உளுந்தூர்பேட்டை டோல்கேட் வந்துவிட்டது. அங்கு வடக்கு மண்டல ஐ.ஜி சங்கர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி பாண்டியன், கள்ளக்குறிச்சி எஸ்.பி ஜியாவுல் ஹக் ஆகியோர் நின்றிருக்கிறார்கள். கார் நின்றதும், கதவைத் திறந்துகொண்டு பதறி ஓடிய அந்தப் பெண் அதிகாரி, ஜியாவுல் ஹக் பின்னால் சென்று கடும் பதற்றத்துடன் நின்றிருக்கிறார்.

நிலைமையைப் புரிந்துகொண்ட ஜியாவுல் ஹக், உடனடியாக ஒரு காரை வரவழைத்து, அந்தப் பெண் அதிகாரியைப் பாதுகாப்பாக அனுப்பிவைத்திருக்கிறார். தொடர்ந்து, வடகிழக்கு மாநிலத்தில் பணிபுரியும் தன் ஐ.ஏ.எஸ் கணவரிடம் விஷயத்தைச் சொல்லி, வெடித்து அழுதிருக்கிறார் பெண் அதிகாரி. கொதித்துப்போன கணவர், இது குறித்து மத்திய உள்துறை அதிகாரிகளிடம் கொட்டித் தீர்த்துவிட்டார். இந்த இடைப்பட்ட நேரத்தில்தான் பிப்ரவரி 22-ம் தேதி காலையில் டி.ஜி.பி திரிபாதி, உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரிடம் நேரில் புகார் அளிப்பதற்காக பெண் அதிகாரி சென்னைக்குக் கிளம்பினார்.

தடுத்த கண்ணன்... கடுகடுத்த பெண் அதிகாரி!

பெண் அதிகாரி சென்னை செல்லும் தகவலை மோப்பம் பிடித்த ராஜேஷ் தாஸ், தனக்கு விசுவாசமான செங்கல்பட்டு எஸ்.பி கண்ணனிடம் விவரத்தைக் கூறி, பெண் அதிகாரியை பரனூர் டோல்கேட்டுக்கு முன்பாகத் தடுத்து நிறுத்தும்படி கூறியிருக்கிறார். உடனடியாக திருச்சி - சென்னை நெடுஞ்சாலைக்குச் சென்ற கண்ணன், பெண் அதிகாரியின் காரை மடக்கியிருக்கிறார். அங்கு அந்தப் பெண் அதிகாரியிடம் அதிகாரமாகப் பேசிய கண்ணன், ‘நான் சொல்லும்வரை இந்த இடத்தைவிட்டு நகரக் கூடாது’ என்று உத்தரவிட்டிருக்கிறார். இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பெண் அதிகாரியை வலுக்கட்டாயமாக ராஜேஷ் தாஸிடம் போனில் பேசவைத்திருக்கிறார் கண்ணன். கண்ணனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை செல்போனில் வீடியோவாக எடுத்த பெண் அதிகாரி, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அதை ஷேர் செய்திருக்கிறார். இதில் உஷாரான கண்ணன், உடனடியாக அங்கிருந்து நழுவிவிட்டார்.

சென்னைக்கு வந்து உள்துறைச் செயலாளர் பிரபாகர், டி.ஜி.பி திரிபாதி ஆகியோரிடம் புகாரைக் கொடுத்திருக்கிறார் அந்தப் பெண் அதிகாரி. ஆனால், சம்பவம் நடந்து சுமார் 48 மணி நேரமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தமிழக அரசு. இதனால், வடமாநிலங்களில் பணிபுரியும் தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலர் கொதிப்புடன் மத்தியப் பெண் அமைச்சர் ஒருவரிடம் முறையிட்டிருக்கிறார்கள். விஷயத்தைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த அமைச்சர், தமிழக உயரதிகாரி ஒருவரிடம் போனில் சீறியிருக்கிறார். ஒருபக்கம் மத்திய அரசு தரப்பிலிருந்தும் நெருக்கடிகள் அதிகரிக்க... இன்னொரு பக்கம் மீடியாக்களிலும் விஷயம் பெரிதாக... தி.மு.க தரப்பிலிருந்து குடும்ப உறுப்பினர் ஒருவர், பெண் அதிகாரி அளித்த புகார் நகலைக் கைப்பற்றிவிட்டார் என்று கூறப்படுகிறது. இதை தி.மு.க வெளியிட்டுவிட்டால் என்னாவது என்று பதறிய ஆளும்தரப்பு ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை விசாரிக்க ஆறு பேர்கொண்ட விசாகா கமிட்டியை அமைத்ததுடன், அவரை காத்திருப்போர் பட்டியலில் வைத்தது’’ என்றார்கள். தொடர்ந்து, பெண் அதிகாரியிடம் ராஜேஷ் தாஸுக்காக சமரசம் பேச முயன்ற தனிப்பிரிவு ஆய்வாளர் வனிதாவும் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறது அரசு.

 செங்கல்பட்டு எஸ்.பி கண்ணனோ, “உயரதிகாரி உத்தரவிடும்போது, அதைச் செய்ய வேண்டியது என் பணி. ராஜேஷ் தாஸ் உத்தரவுப்படிதான் சம்பந்தப்பட்ட எஸ்.பி-யைத் தடுத்து நிறுத்தி, அவரை ராஜேஷ் தாஸுடன் பேசவைத்தேன். இந்த விவகாரம் மீடியாக்களில் வெளியாகும் வரை, இருவருக்குமிடையே என்ன பிரச்னை என்பதுகூட எனக்குத் தெரியாது” என்று நழுவினார்.

பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளின்போதுதான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அவர் பிறந்தநாளை ‘பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக’ கொண்டாடும் பழனிசாமி அரசு, ஒரு பெண் காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய முடியாததற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். 2001-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான ரவீந்திரநாத் என்ற டி.ஜி.பி-யை சஸ்பெண்ட் செய்தார் ஜெயலலிதா. ஆனால், பணியிட மாற்றம் செய்வதற்குக்கூட பயந்துகொண்டு பம்மிய பழனிசாமியின் அரசை என்னவென்று சொல்வது? வார்த்தைக்கு வார்த்தை ‘இது அம்மாவின் அரசு’ என்று சொல்வதற்கு பழனிசாமி அரசுக்குத் துளியும் அருகதை இல்லை!

ஐ.ஜி முருகன் வழக்கு என்னாச்சு?பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.க-வினர் அடுத்தடுத்து கைதானபோது அவர்களைக் காப்பாற்றுவதற்காக துடிதுடித்த எடப்பாடி பழனிசாமி அரசு, அதிகாரிகளையும் இது போன்ற பாலியல் புகார்களிலிருந்து காப்பாற்றத் தயங்கவில்லை. ஏற்கெனவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய ஐ.ஜி முருகன் மீது அவருக்குக் கீழ் பணியாற்றிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் ஆதாரங்களுடன் பாலியல் புகார் அளித்தார். புகாரை விசாரிக்க, குழுவும் அமைக்கப்பட்டது. அதில் இப்போது ராஜேஷ் தாஸுக்காக அமைக்கப்பட்ட விசாரணை கமிட்டியில் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் சீமா அகர்வாலும் இடம்பெற்றிருந்தார். ஆனால், இந்த விவகாரம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. முருகனும் பதற்றமே இல்லாமல் தென் மண்டல ஐ.ஜி-யாக உலாவருகிறார்.

டெல்டாவில் ஒரு ‘தாஸ்’!மாட்டிக்கொண்டது ஒரு ராஜேஷ் தாஸ் மட்டும்தான். ஆனால், இதேபோல பல ‘ராஜேஷ் தாஸ்’கள் காவல்துறையில் வலம்வருகிறார்கள் என்கிறார்கள் பெண் காக்கிகள். உதாரணத்துக்கு, டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பி ஒருவர், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருடன் நெருக்கமாக இருந்துகொண்டு, பல்வேறு பெண் காவலர்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டிருக்கிறார். அவர்மீது வேறு பல புகார்களும் எழ, ராஜேஷ் தாஸைக் காத்திருப்போர் பட்டியலில்வைத்த அதே நேரத்தில், இந்த அதிகாரியையும் இடமாற்றம் செய்திருக்கிறது தமிழக அரசு.

ராஜேஷ் தாஸ் டி.ஜி.பி-யான பின்னணி!தமிழக டி.ஜி.பி-யாக யாரைப் பணிக்கு அமர்த்துவது என்று 2019, ஜூனில் விவாதிக்கப்பட்டபோது, முதல்வர் பழனிசாமியின் சாய்ஸ் ஜாபர் சேட் என்கிறார்கள். ஆனால், மத்திய உள்துறையின் சிபாரிசு திரிபாதிக்கு இருந்ததால், திரிபாதியை சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யாக நியமித்தது தமிழக அரசு. ஆட்சியாளர்களின் சில அரசியல் காய்நகர்த்தல்களுக்கு அவர் பணியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவருக்குப் போட்டியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் கொண்டு வரப்பட்டவர்தான் ராஜேஷ் தாஸ். வந்ததுமே, ‘திரிபாதியைவிட நான்தான் பெரிய ஆள். எல்லோரும் என்னிடம்தான் பேசணும்’ என மாவட்ட எஸ்.பி-க்களுக்கு ஆர்டர் போட்டார். இப்படிப் பல விஷயங்களில் திரிபாதிக்கும் இவருக்கும் இடையே நடந்த பனிப்போர் தமிழகத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை முன்வைத்து தி.மு.க அறிக்கைவிடும் அளவுக்கு விஷயம் பெரிதானது. ஆனாலும், எடப்பாடியின் எண்ண ஓட்டத்தை அப்படியே செயல்படுத்திக் காட்டினார் ராஜேஷ் தாஸ்.

சமீபத்தில் சசிகலாவின் காரிலிருந்து கொடியைக் கழற்றிய விவகாரமாகட்டும்... முதல்வருக்கு பந்தாவாக பாதுகாப்பு அளித்ததாகட்டும்... எல்லாவற்றிலும் பழனிசாமியின் மனதைக் கவர்ந்தார். சமீபத்தில் 54 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாறுதல் விஷயத்திலும் திரிபாதி, ராஜேஷ் தாஸ் இருவருக்கும் முரண்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில்தான், ஓரங்கட்டப்பட்டிருக்கிறார் ராஜேஷ் தாஸ்!


ராஜேஷ் தாஸின் பாலியல் அத்துமீறல் தொடர்பாக ஐ.பி.எஸ் அதிகாரிகளின் வாட்ஸ்அப் குழுக்களில் காரசாரமாக விவாதம் நடந்துவருகிறது. முதல் ஆளாக பொன்னி ஐ.பி.எஸ் இந்தப் பிரச்னையை பிப்ரவரி 24-ம் தேதி மதியம் வாட்ஸ்அப் குழுவில் எழுப்பியிருக்கிறார். ஐ.ஜி அருண், ‘யார் தவறு இழைத்திருந்தாலும் அவரைத் தூக்கில் தொங்கவிட வேண்டும்’ என்று காரமாகவே விளாசியிருக்கிறார். கூடுதல் டி.ஜி.பி ரவி மட்டும், ‘மீடியாக்கள் இந்த விவகாரத்தில் நீதி பரிபாலனம் செய்வதை அனுமதிக்கக் கூடாது. விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பதிவிட்டிருக் கிறார். பெண் ஐ.பி.எஸ்-கள் பலரும், ‘ராஜேஷ் தாஸைக் கைது செய்ய வேண்டும்’ என்று பொங்கியிருக்கிறார்கள். ஒருவேளை ராஜேஷ் தாஸுக்குச் சலுகை காட்டப்பட்டால், ‘மி டூ’ குரூப் ஆரம்பிக்கவும் பெண் அதிகாரிகள் முடிவெடுத்திருக்கிறார்களாம்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்