பாஸ்டேக் இணைக்காத வாகனங்களுக்கு இருமடங்கு அபராதம்
நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளில் கட்டாய பாஸ் டேக் முறை அமலுக்கு வந்துள்ள நிலையில், பாஸ்டேக் இணைக்காத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு சுங்க கட்டணம் வசூலிக்கபட்டு வருகிறது.
இதனால் ஆங்காங்கே வாகன ஓட்டிகள் தகராறில் ஈடுபட்டாலும் பலர் பாஸ்ட் டேக் ஸ்டிக்கரை வாங்கி ஒட்டிய பின் பயணித்தனர்.
சுங்கச்சாவடிகளில் வாகன கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் விதமாக பாஸ்ட்டேக் ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டும் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது.
பாஸ்ட்டெக் உடன் இணைக்கப்பட்டிருக்கும் வங்கி கணக்கில் இருந்து இணைய பரிவர்த்தனையில் மின்னணு முறையில் சுங்க கட்டணம் எடுக்கப்பட்டு விடும். பிப்ரவரி 15க்குள் பாஸ்டேக் பரிவர்த்தனையில் இணைவது கட்டாயம் எனவும், அதற்கு பிறகு பாஸ்டேக் இணைக்காத வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தில் அபராதம் வசூலிக்க படும் என கூறப்பட்டது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள 450 சுங்க சாவடிகளில் பாஸ்டேக் முறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அபராதத்தை தவிர்க்க வாகன ஓட்டிகள் பாஸ்ட்டேக் ஸ்டிக்கரை ஒட்டி செல்கின்றனர்.
பாஸ் டேக் பற்றிய விழிப்புணர்வு இல்லாத வாகன ஓட்டிகள் சிலர் வானகரம் சுங்க சாவடியில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
வங்கி பரிவர்த்தனை கோளாறு, இணைய சேவை பாதிப்பு போன்றவற்றால் கட்டணம் வசூலிப்பதில் சிக்கல் இருந்தால் அதற்கென பிரத்தியேக கருவிகள் மூலம் ஊழியர்கள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வங்கி வைப்பு தொகை குறைவாக இருந்தாலும் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என சுங்க துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆத்தூர் என்ற இடத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் பாஸ்ட்டேக் இல்லாத வாகன ஓட்டிகளிடம் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.
சென்னை அருகே சோழவரம் நல்லூர் சுங்கச்சாவடியில் பாஸ்டெக் முறை சரியாக செயல்படாததால் சுங்கச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்கள் கைகளில் வைத்துள்ள எந்திரங்களால் பாஸ்டெக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்த பின்னர் வாகனங்கள் செல்கின்றன.
இதனால் காலதாமதமாகி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு சில வாகன ஓட்டிகள் வாக்குவாதம் செய்தனர்.
திருச்சி மாவட்த்திலுள்ள சுங்கச்சாவடிகளில் 90 சதவீத வாகனங்கள் பாஸ்ட்டேக் ஸ்டிக்கருடன் செல்கின்றன. இருமடங்கு அபராத கட்டணத்தை தவிர்க்கும் வகையில் வாகன ஓட்டிகள் சற்று தொலைவிலேயே தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு அங்குள்ள தற்காலிக வங்கி கவுண்டர்களில் ரீசார்ஜ் செய்து கொள்கின்றனர்.
மதுரை கப்பலூர் சுங்கச் சாவடியில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் நின்று பாஸ்டேக் ஸ்டிக்கரை பெற்றுச் செல்கின்றனர். ஒரு சிலர் இருமடங்கு கட்டணமும் செலுத்தி சுங்க சாவடியை கடந்து செல்கின்றனர்.