சென்னையில் விடிய விடிய பெய்த கன மழை.. சாலைகளில் தேங்கிய வெள்ளம்
சென்னையில் ஒரே இரவில் 12 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதியில் இரவு தொடங்கிய மழை விடிய விடிய நீடித்ததால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதன் அறிகுறியாக, சென்னையில் நேற்று மேகமூட்டமாகவும் சில நேரங்களில் லேசான சாரல் மழையும் பெய்தது. இந்நிலையில், நள்ளிரவில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இரவில் தொடங்கிய மழை இன்று காலையிலும் நீடித்தது. கனமழை காரணமாக, பால் விநியோகம் செய்வோர், காய்கறி வியாபாரிகள், காலையில் பணிக்கு செல்வோர் கடும் அவதியடைந்தனர். கார்கள், இருசக்கர வாகனங்களில் தண்ணீர் புகுந்ததால் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.
இரவில் பல மணி நேரம் நீடித்த மழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கியிருந்தது. ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் அதிகளவு தேங்கிக் காணப்பட்டது. கடற்கரை சாலை, ராதாகிருஷ்ணன் சாலை போன்ற முக்கிய சாலைகளிலும், சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கியது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
நுங்கம்பாக்கத்தில் 12 சென்டிமீட்டரும், செங்குன்றத்தில் 13 சென்டிமீட்டரும் மழை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது