தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு: திரையரங்குகள் திறக்கப்படுமா என எதிர்பார்ப்பு
தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில்,திரையரங்குகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்த ஊரடங்கில், படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் கூடிய புதிய அறிவிப்பு வெளியாக உள்ளது.
புதிய அறிவிப்பில், 7 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளை, கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன் படிப்படியாக திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தாலும், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் முதலமைச்சரை சந்தித்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர், தீபாவளி முதலாவது திரையங்குகளை திறக்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்து இருந்தனர்.
இதேபோல், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை புறநகர் ரயில் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்தும் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது