முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்... புயலாய் புறப்பட்ட தேனியை சேர்ந்த வீரலட்சுமி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் டிவிகே நகர் சாமி தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி - சவித்ரி தம்பதியினரின் மகள் வீரலட்சுமி (30). இவருக்கு கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 5-ம் வகுப்பு படிக்கும் மகள் மற்றும் 1-ம் வகுப்பு படிக்கும் மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.


வீரலட்சுமியின் கணவர் முத்துகுமார் சென்னையில் டாக்ஸி ஓட்டுநராக 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது வீரலட்சுமி தனது கணவருடன் சென்னை திருவேற்காடு பகுதியில் வசித்து வருகிறார்.


சிதம்பரத்தில் டிப்ளமோ ஆட்டோ மொபைல் படித்த இவர் சென்னையில் கடந்த 3 வருடங்களாக தனது கணவருக்கு உதவியாக கால் டாக்ஸி ஓட்டி வந்துள்ளார்.


இதற்கிடையே கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் போடிக்கு வந்துள்ளார்.


அப்போது தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பயிற்சியும் பெற்றுள்ளார். தற்போது சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தேனி மாவட்டத்தை சேர்ந்த வீரலட்சுமி தமிழகத்தில் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக நியமிக்கப்பட்டது அனைவரிடமும் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.


இது குறித்து வீரலட்சுமி கூறுகையில் ஓட்டுநர் பணி என்பது தனக்குப் மிகவும் பிடித்த வேலை அதிலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியில் சேர்ந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.


பணியில் சேர்ந்த பின்புதான் தெரிந்தது தான் தான் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என்பது. 108 ஆம்புலன்ஸ் அதிவேகமாக ஓட்டுவதில் எனக்கு எந்த பயமும் இல்லை.


என்னைபோல் அனைத்து பெண்களும் மக்களுக்கு சேவை செய்யும் விதத்தில் பல்வேறு பணிகளில் சேர வேண்டும் என்கிறார் பெருமையாக.