நேற்று காரில் கழற்றப்பட்ட தேசியக் கொடி; வரிசைகட்டும் ஆதரவாளர்கள் - பரபரப்பான ஓ.பி.எஸ் வீடு!

தன் உதவியாளரை அழைத்த ஓ.பி.எஸ், அவர் காதில் ஏதோ கிசுகிசுக்க... சற்று நேரத்தில் பன்னீர் காரிலிருந்த தேசியக் கொடி கழற்றப்பட்டு அ.தி.மு.க கொடி ஏற்றப்பட்டது.


அ.தி.மு.க செயற்குழு கூட்டத்தில் வெடித்த `யார் முதல்வர் வேட்பாளர்?’ பிரச்னைக்குப் பிறகு கட்சி மீண்டும் இரண்டு பிரிவுகளாக பிரிய ஆரம்பித்துள்ளது.


ஓ.பன்னீர்செல்வத்தை, அவரது ஆதரவாளர்கள் சந்திப்பதும் எடப்பாடி பழனிசாமியை, அவரது ஆதரவு அமைச்சர்கள் சந்திப்பதுமாகக் காட்சிகள் நகர்கின்றன.


வரும் அக்டோபர் 7-ம் தேதி அ.தி.மு.க கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டியளித்திருந்த சூழலில், தன் இருப்பை விட்டுத்தரும் ஐடியாவில் பன்னீர் இல்லை என்கிறது அ.தி.மு.க வட்டாரம்.


நேற்று செப்டம்பர் 29-ம் தேதி காலை முதலே சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் பொதிகை இல்லம் பரபரப்பாகக் காணப்பட்டது. பன்னீரின் ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் அடுத்தடுத்து வந்தனர்.


சிறிது நேரத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கமும் பொதிகை இல்லத்துக்கு வந்தார். வீட்டின் முதல் மாடியிலுள்ள வரவேற்பு அறையில் அமர்ந்திருந்தவர்களை இறுக்கமான முகத்துடன் பன்னீர் வரவேற்றார். இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து பன்னீரின் ஆதரவாளர்களிடம் பேசினோம்.


``கனத்த மவுனத்துடன் அமர்ந்திருந்தவர்களை பன்னீரின் குரல்தான் கலைத்தது. `அவர் இப்படிப் பேசுவார்னு நான் நினைச்சுப் பார்க்கலைங்க’ என்று எங்கோ வெறித்துப் பார்த்தபடி எடப்பாடி குறித்து பன்னீர் பேச ஆரம்பித்தார். `சட்டமன்றத்துல நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தபோது, இந்த ஆட்சிக்கு எதிராக ஓட்டுப் போட்டுட்டோம். நாங்க எல்லாம் துரோகிகள்ங்கற மாதிரி பேசுறாரு.


நான் மட்டும் தர்மயுத்தத்தை கைவிட்டுட்டு கட்சியில இணைஞ்சிருக்கலைனா இந்த ஆட்சி இருந்திருக்குமா? இல்லை, இவர்தான் முதல்வரா நீடிச்சிருப்பாரா? கட்சி சின்னாபின்னமா போய்விடக் கூடாதுங்கற ஒரே காரணத்துக்காகத்தான் மறுபடியும் அவர்கூட கைகோத்தேன்.


ஆனால், எனக்கே துரோகிப் பட்டம் சூட்டுறாங்க’ என்று வருத்தமானார். அவரை ஆசுவாசப்படுத்திய வைத்திலிங்கம், `முதல்வர் வேட்பாளரைப் பற்றிப் பேசவேண்டிய நேரம் இது கிடையாது. வேணும்னே பிரச்னையை உருவாக்குறாங்க’ என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தவும், அதை ஆமோதித்த கே.பி.முனுசாமி, `இரண்டு அணிகளும் ஒன்றிணைந்தபோது என்ன பேசப்பட்டது? இரண்டரை வருஷத்துக்கு எடப்பாடி முதலமைச்சர். மீதி ஆண்டுகளுக்கு பன்னீர்செல்வம் முதலமைச்சர்னுதானே பேசப்பட்டது. அதை மதிச்சாங்களா? 2021 சட்டமன்றத் தேர்தலின்போது முதல்வர் வேட்பாளர் பன்னீர்தான்னு அப்போதே தீர்மானிக்கப்பட்டது.


இதையெல்லாம் வகையாக மறந்துட்டாங்க. வழிகாட்டுதல் குழு போடுவோம்னு தீர்மானம் பண்ணி மூணு வருஷமாச்சு. ஒவ்வொரு கூட்டத்துலயும் இதுசம்பந்தமா பேசிப் பேசி நான் டயர்ட் ஆனதுதான் மிச்சம். கட்சியோட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்தான். ஆனால், இவரால ஒரு மாவட்டச் செயலாளரைத் தன் விருப்பப்படி நியமிக்க முடியுமா? எல்லாமே தங்கமணி, வேலுமணி தீர்மானிப்பதாகத் தானே இருக்குது.


இனிமேலும் இவங்களை நம்பிட்டு இருக்குறதுக்கு நாம முட்டாள் இல்லை’ என்று தன் பங்குக்கு ஆவேசத்தை கொப்பளித்தார் முனுசாமி. வாட்டமாக இருந்த பன்னீரின் முகத்தில் கோப ரேகைகள் படர்ந்தன.


தன் உதவியாளரை அழைத்த பன்னீர், அவர் காதில் ஏதோ கிசுகிசுக்க... சற்று நேரத்தில் பன்னீர் காரிலிருந்த தேசியக் கொடி கழற்றப்பட்டு அ.தி.மு.க கொடி ஏற்றப்பட்டது. இதனால் ஆதரவாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டு, `துணை முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்யப் போகிறார்’ என்கிற தகவல் தீயாகப் பரவியது.


கட்சி அலுவல் ரீதியாக பன்னீர் பயணமாகும்போது அவர் காரில் அ.தி.மு.க கொடி ஏற்றப்படும். ஆகவே,`அ.தி.மு.க அலுவலகத்துக்குச் செல்கிறோமா, அல்லது ஜெயலலிதா சமாதிக்கா?’ என விவரம் புரியாமல் பாதுகாப்பு அதிகாரிகள் தவித்து நின்றனர்.


வெளி சலசலப்புகள் ஏதும் அறியாததுபோல, பன்னீரின் வீட்டுக்குள் கூட்டம் தொடர்ந்து கொண்டுதானிருந்தது `செயற்குழு உறுப்பினர்கள் 200 பேரோட ஆதரவு இருக்குறதா எடப்பாடி சொல்றாரே...


தொண்டர்கள் யார் பக்கம்னு கேட்டு இருக்கனும்ல’ என்று மனோஜ் பாண்டியன் பேசியதை பன்னீர் ஆமோதித்தார். ‘இதை புரிஞ்சுக்குற நிலைமையில எடப்பாடி இல்லை. எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்குனு அவர் நினைச்சுட்டு இருக்கார். நான் நினைச்சிருந்தா, தர்மயுத்தம் காலத்திலேயே ஒரேயடியா கட்சியை உடைச்சு தனியா பிரிஞ்சு போயிருக்க முடியும். புரட்சித் தலைவரும் அம்மாவும் கட்டிக்காத்த இந்தக் கட்சிக்கு என்னால களங்கம் வந்துடக் கூடாதுனுதான் அப்படி செய்யல.


இன்னைக்கும் தொண்டர்கள் யார் பக்கம்னு அவருக்குத் தெரியும். நான் மட்டும் இல்லைனா, இதுவெறும் கொங்கு கட்சியாத்தான் அடையாளம் ஆகியிருக்கும்.


இப்ப இரட்டைத் தலைமையில கட்சி ஒழுங்கா போகுது. முதல்வர் வேட்பாளர் யார்னு முடிவெடுக்க வேண்டிய நேரம் இது கிடையாது. தேர்தலை சந்திச்ச பிறகு முடிவெடுக்கலாம்’ என்று விடாப்படியாக நின்றார் பன்னீர்.


முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தைத் தவிர்த்த ஓ.பி.எஸ்! - ஆதரவாளர்களுடன் ஆலோசனை `இப்ப என்ன அண்ணே செய்யலாம்?’ என மனோஜ் பாண்டியன் கேட்டதற்கு, `அமைதியா இருப்போம்’ என்று ஒற்றை வரியில் பதிலளித்துவிட்டு அமைதியானார் பன்னீர்.


அதற்கு மேல் எதுவும் பேசாமல் கூட்டம் கலைந்தது. எடப்பாடியின் மூவ்க்கு ஏற்றார்போல தன்னுடைய பதிலடியை வைத்துக் கொள்வது என்று தீர்மானித்திருக்கிறார் பன்னீர். இந்த முட்டல் மோதல் தொடரும் எனத் தெரிகிறது” என்றனர்.


பன்னீர் காரில் இருந்து கழற்றப்பட்ட தேசியக் கொடி, மதியம் 12 மணியளவில் மீண்டும் ஏற்றப்பட்டது. இன்று தேனி கிளம்புவதற்கு அவர் திட்டமிட்டிருந்ததாகவும், அதற்காகத்தான் தேசியக் கொடியை கழற்றிவிட்டு கட்சிக் கொடியை காரில் ஏற்றச் சொன்னதாகவும் பன்னீர் தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது.


கடைசி நேரத்தில் பயணத்தை பன்னீர் ரத்து செய்ததால், காரில் மீண்டும் தேசியக் கொடி ஏற்றப்பட்டதாம். இதற்கிடையே பொதிகை இல்லத்துக்கு திடீரென வந்த முன்னாள் அமைச்சரும் ராமநாதபுரம் எம்.எல்.ஏ-வுமான மணிகண்டன், பன்னீரை சந்தித்து சிறிது நேரம் உரையாடினார்.


அப்போது, அவருக்கு மணிகண்டன் தார்மீக ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த பரபரப்பு அடங்கும் முன்னர், பன்னீரை நேற்று இரவு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்துப் பேசினார்.


அடுத்தடுத்து முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர்கள் பன்னீரைச் சந்தித்துப் பேசிவருவது கொங்கு ஏரியாவில் கலக்கத்தை உருவாக்கி இருக்கிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா