ஆன்லைன் வகுப்புகள்ல செல்போன் சேவை இல்லாத மலைக்கிராமங்கள்..!

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு - அணையின் மேல்பகுதியில் 500க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் நலன்கருதி தமிழக அரசு ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. மலைக்கிராமங்களில் டவர்கள் இல்லாததால் தங்கள் குழந்தைகள் கல்வி கற்க முடியாத நிலை உள்ளது. ஆகையால் மலைக்கிராம மாணவ, மாணவிகளின் நலன் கருதி தமிழக அரசு உடனடியாக டவர்கள் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு வைத்துள்ளனர்.


மணிமுத்தாறு அணையின் மேல்பகுதியில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, குதிரை வெட்டி உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளது. தமிழக அரசு தற்போது ஆன்லைன் வகுப்புகளை துவங்கியுள்ள நிலையில் இப்பகுதியில் வசிக்கும் மாணவ, மாணவிகள் கல்வி கற்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இந்தப் பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாடங்களை படிக்க முடியாமல் திண்டாடுகின்றனர்.


மலையோர கிராமங்களில் பிஎஸ்என்எல் 2ஜி சேவை மட்டுமே உள்ளது. 3ஜி வசதி செய்து கொடுத்தால் மட்டுமே பாடங்களை கற்க வசதியாக இருக்கும் என்று மாணவர்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வந்தனர். இந்நிலையில் மாணவர்களின் நல மாணவர்களின் நலன்கருதி பிஎஸ்என்எல் சார்பில் மலைக்கிராமங்களில் 3ஜி செல்போன் டவர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டது. ஆனால் செல்போன் டவர் அமைக்கப்பட்ட மறுதினமே வனத்துறை செல்போன் டவரை அகற்ற உத்தரவிட்டது.


மலைப்பகுதிகளில் களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பக சரணாலயப் பகுதிகளில் மாஞ் சோலை அமைந்துள்ளதால், 3ஜி செல்போன் டவர் அமைத்தால் அலைக்கற்றையின் வீரியத்தால் குருவிகள் உள்ளிட்ட பறவை இனங்களும், சில அரிய வகை உயிரினங்கள் அழிந்துவிடும் என வனத்துறை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் கல்வி கற்க சிரமப்பட்டு வருகிறார்கள். ஆகையால் கொரோனா காலகட்டம் முடிந்து பள்ளிகள் திறக்கும் வரையாவது மாணவ, மாணவிகளின் கல்வியை கருத்தில் கொண்டு 3ஜி செல்போன் சேவையை மலைக்கிராமங்களுக்கு தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நடப்பு கல்வி ஆண்டு கல்வி பாதிக்காமல் இருக்க வேண்டுமானால் 3ஜி சேவை செல்போன் டவர் அமைக்க வேண்டும் என மலைக்கிராம மக்களும், மாணவ, மாணவிகளும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்களும், மாணவர்களும் கூறுகையில், எனது தாத்தா, எனது தந்தை, தற்போது நான் முப்பந்தைந்து வருடங்களாக வேலை பார்த்து வருகிறேன்.


தினக்கூலி தொழிலாளர்களாகத்தான் கஷ்டப்பட்டு வேலை பார்த்து வருகிறோம். எங்களது வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த கஷ்டம் எங்களோடு போகட்டும். இனிமேல் வரும் எங்களது தலைமுறைகளாவது படித்து முன்னேறி அரசு வேலைகளுக்கு செல்லட்டும்என்ற கனவுகளோடு மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறோம். ஆனால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் துவங்கியுள்ளதால் எங்கள் பகுதிகளில் உள்ள குழந்தைகள் 3ஜி சேவை கிடைக்காததால் படிப்பை தொடர முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.


மலைப்பகுதிக்கு கீழ் வசிக்கும் மாணவ, மாணவிகள் தற்போது 1 மாத காலமாக 50% பாடங்களை படித்துவிட்டார்கள். ஆனால் நாங்கள் இன்னும் பாடங்களை படிக்க ஆரம்பிக்கவே இல்லை. தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல்வாதிகள் எங்களைத் தேடி வருகிறார்கள். மறுபடி எங்களை கண்டுகொள்வதே இல்லை. மலைக்கிராமமான எங்கள் பகுதிகளில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளி கல்லூரிகளில் படித்து வருகிறோம். எங்களது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு எங்களுக்கு 3ஜி சேவையை வழங்க வேண்டும் என கோரிக்கையை வைக்கின்றனர்.


மூன்று தலைமுறைகளாக தினக்கூலி தொழிலாளர்களாக வேலைபார்த்து கஷ்டப்பட்டு தங்களது குழந்தைகளாவது படித்து முன்னேற வேண்டும் என்ற கனவுகளோடு படிக்க வைக்கும் பெற்றோர்களின் கனவுகளை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நிறைவேற்றுவார்களா? நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் நாமும் காத்திருப்போம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)