தங்கம், ட்ரோன்கள், விலை உயர்ந்த செல்ஃபோன்களை கடத்தி வந்த 4 பேரை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் கைதுசெய்தனர்.

கொரோனா வைரஸ் ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவிப்பவர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை அழைத்துவரப்படுகின்றனர். அதன்படி சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அந்த சிறப்பு விமானத்தில் பயணித்தவர்களின் உடமைகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.


அப்போது சென்னையை சேர்ந்த பயணியின் சூட்கேசில் இருந்து 5 ட்ரோன்கள், 2 ஐஃபோன்கள் சிக்கின. மேலும் அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 430 கிராம் தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது. இதன்மதிப்பு சுமார் 33 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதேபோன்று குவைத், கத்தார் விமானங்களில் வந்த ஆந்திராவை சேர்ந்த இருவர் மற்றும் விருதுநகரை சேர்ந்த ஒரு பயணியிடம் இருந்து மொத்தம் 570 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானங்களில் கடத்தி வந்த தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக மொத்தம் 6 பேரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது