ஜன.,27ல் விடுதலையாகிறார் சசிகலா: சிறை நிர்வாகம் பதில்

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா, அடுத்தாண்டு (2021) ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்யப்படுவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ) கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளது.


வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை 2017ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 2017ம் ஆண்டு பிப்ரவரி முதல் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராதத்தை செலுத்தவில்லை என்பதால், அவரின் விடுதலை தாமதமாகும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ) கீழ், சசிகலாவின் விடுதலை குறித்து கேட்டிருந்தார்.


இதற்கு பதிலளித்த சிறை நிர்வாகம், சசிகலா வரும் ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலையாவதாக தெரிவித்துள்ளது. மேலும், அபராதத்தொகை ரூ.10 கோடியை அவர் செலுத்தாத பட்சத்தில் 2022ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி தான் விடுதலையாவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல், பரோல் விதியை பயன்படுத்தினால் சசிகலா விடுதலை தேதி மாறுபடவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.