ஓட்டுநர் உரிமங்கள் உள்ளிட்ட ஆவணங்களைப் பராமரிக்க ஐடி போர்டல் - அக்.1 முதல் அமல்

ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் இ-சலான்கள் உள்ளிட்ட வாகன ஆவணங்கள் அக்டோபர் 1 முதல் தகவல் தொழில்நுட்ப இணையதளம் மூலம் பராமரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த 26ம் தேதி தெரிவித்தது.


எலக்ட்ரானிக் மூலம் வாகன ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதால், மக்கள் நேரில் செல்லத் தேவையில்லை. மேலும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட அல்லது உரிம அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமங்களின் விவரங்கள் போர்ட்டலில் காலவரிசைப்படி பதிவு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படும் எனவும் தகவல் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.


முன்னதாக, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் (MoRTH), மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989ல் பல்வேறு திருத்தங்கள் குறித்து சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "தகவல் தொழில்நுட்பச் சேவைகள் மற்றும் மின்னணு கண்காணிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டில் போக்குவரத்து விதிகளை சிறப்பாக அமல்படுத்துவதோடு, ஓட்டுநர்களின் சிரமங்களைத் தவிர்க்க வழிவகுக்கும். குடிமக்களுக்கு வசதியாகயாகவும் இருக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) சட்டம் 2019 நிறைவேற்றப்பட்டு 2019 ஆகஸ்ட் 9ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த திருத்த மசோதா அமல்படுத்தப்படுவது அவசியம் என கூறப்பட்டது. இந்த மோட்டார் வாகன திருத்த விதிகள் சலானுக்கான வரையறையை வழங்குகிறது. ஐ.டி மூலம் சேவைகளை அளிப்பதற்கான போர்ட்டலாகச் செயல்படும் என்கிறது.


மேலும், மின்னணு கண்காணிப்பு மற்றும் அமலாக்கம் ஆகியவை வழங்கப்படும் என்றும் குறிப்பிடுகிறது. எனவே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட அல்லது உரிம அதிகாரத்தால் ரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமங்களின் விவரங்கள் காலவரிசைப்படி போர்ட்டலில் பதிவு செய்யப்படும் என்றும் மேலும் இதுபோன்ற பதிவுகள் போர்ட்டலில் வழக்கமான அடிப்படையில் இடம்பெறும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


எனவே பதிவுகள் மின்னணு முறையில் பராமரிக்கப்படுவதோடு ஓட்டுநர் நடத்தையும் முறையாகக் கண்காணிக்கப்படும்.


இதுதவிரவும் பல விஷயங்கள் பதிவாகவுள்ளன. மேலும், கையடக்க சாதனத்தைப் பயன்படுத்துதல், மின்னணு வடிவத்தில் ஆவணங்களை ஆய்வு செய்தல் போன்ற சட்டத் திருத்தத்துடன் அதை இணைக்க மோட்டார் வாகனங்கள் (ஓட்டுநர்) விதிமுறைகள் 2017ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் மத்திய அரசாங்கம் கூறியுள்ளது.