நீட் தேர்வை அடிச்சு தூக்க நம் புத்தகங்களே போதும்...!

கிராமப்புற மாணவர்கள் அச்சப்படாமல், தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல், நம் மாநில பாடப்புத்தகங்களை புரிந்து படித்தாலே நீட், JEE உள்ளிட்ட அனைத்து வகை நுழைவுத் தேர்வுகளிலும் வெற்றி பெறலாம் என்று பேராசிரியர்கள் ஆதாரத்தோடு விளக்கியுள்ளனர்.


MBBS, BDS உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த 13-ம் தேதி நடைபெற்றது.


720 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற இத்தேர்வை நாடு முழுவதும் 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் எழுதினர். நீட் தேர்வில் இடம்பெற்ற உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடங்களில் 95 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வினாக்கள் நம் மாநில 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டிருப்பதாக பாடப் புத்தகங்களை வடிவமைத்த பேராசிரியர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.


உயிரியல் பாடத்தில் இடம் பெற்றிருந்த 90 வினாக்களில் 87 வினாக்கள் 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டிருந்ததாகவும், CBSE-ல் பயிலும் மாணவர்கள் பலரும் நம் மாநில அரசின் பாடப் புத்தகத்தை படித்து தேர்வு எழுதுவதாகவும் குறிப்பிடுகிறார் பாடப்புத்தக வடிவமைப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த உயிரியல் துறை பேராசிரியர் நரசிம்மன்.


வேதியியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த 45 வினாக்களில் 43 வினாக்களும், இயற்பியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த 45 வினாக்களில் 44 வினாக்களும் நம் மாநில பாடத்திட்ட 11 மற்றும் 12-ம் வகுப்பு புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டிருப்பதாகக் கூறும் பேராசிரியர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் அவர்களின் மேல் நிலை வகுப்பு புத்தகங்களை முழுமையாகப் படித்தால் 100% வெற்றி உறுதி என்று தன்னம்பிக்கை ஊட்டுகிறார்


இயற்பியல் துறை பேராசிரியை ரீட்டா ஜான். நம் மாநில அரசின் பாடப்புத்தகங்கள் பிற அமைப்புகளின் புத்தகங்களை விட அதிக தரத்தில் வடிவமைத்துள்ளதாகக் கூறும் பேராசிரியர்கள், சமீபத்திய JEE தேர்விலும் 80 சதவிகித வினாக்கள் நம் மாநில பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளனர்.


NEET போன்ற தேர்வுகளுக்கு தயாராக அதிக பணம் மற்றும் CBSE பாடத்திட்டம் தான் வேண்டும் என்ற மாய பிம்பத்தை உடைக்கும் விதமாக, தமிழக அரசின் பாட புத்தகத்தை முழுமையாக புரிந்து


படித்தாலே வெற்றி நிச்சயம் என ஆதாரத்தோடு விளக்கியுள்ள பேராசிரியர்களின் கருத்து, இனி தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கமருந்தாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை