தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருக்கும்போது வக்ஃப் வாரியம் கலைப்பு சட்டவிரோதம்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாக 2 முத்தவல்லிகள் இருக்கும்போது தமிழக வக்ஃப் வாரியத்தை கலைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


தமிழக வக்ஃப் வாரியத்தில் 2 எம்.பி.க்கள், 2 எம்எல்ஏக்கள், 2 பார் கவுன்சில் உறுப்பினர்கள், 2 முத்தவல்லிகள் என மொத்தம் 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாகவும், 4 பேர்அரசின் நியமன உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 2019 செப்டம்பர் 18-ம் தேதி வக்ஃப் வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைவிட நியமன உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகக் கூறி வக்ஃப் வாரியத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.


தமிழக நிதித்துறை செலவின செயலரான சித்திக்கை வக்ஃப் வாரியத்தின் சிறப்பு அதிகாரியாகவும் நியமித்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பசுலூர் ரஹ்மான் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார்.


வக்ஃப் வாரியத்தில் முத்தவல்லிகள் பிரிவில் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்ட எஸ்.செய்யது அலி அக்பர், ஹாஜா கே.மஜீத் ஆகியோரும் இந்த வழக்கில், இடையீட்டு மனுதாரர்களாக வழக்கு தொடர்ந்தனர்.


அதில், ‘பார் கவுன்சில் உறுப்பினர்களில் முஸ்லிம்கள் எனும் பட்சத்தில் வக்ஃப் வாரியத்துக்கு நியமிக்கப்பட்ட முஸ்லிம்களான 2 மூத்த வழக்கறிஞர்களையும் வக்ஃப் வாரியசட்டத்தின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாகவே கருத வேண்டும். அவர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் வக்ஃப் வாரியத்தை கலைத்தது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்.


இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகளை ரத்து செய்து வக்ஃப் வாரியத்திடமே அதிகாரங்களை ஒப்படைக்க வேண்டும்’ என்று கோரப்பட்டு இருந்தது. நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது.


அப்போது, மனுதாரரான பசுலூர் ரஹ்மான் சார்பில் வழக்கறிஞர் எச்.ஆறுமுகம், இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் மகமூத் பராச்சர், இ.அப்ரார் முகமது அப்துல்லா, எச்.முகமது கவுஸ் ஆகியோரும், தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், வக்ஃப் வாரியம் தரப்பில் வழக்கறிஞர் வி.லட்சுமிநாராயணன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.


5 ஆண்டு பதவிக் காலம் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘வக்ஃப் வாரியத்தில் முறைப்படி தேர்தல் மூலமாக கடந்த 2017-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட எஸ்.செய்யது அலி அக்பர், ஹாஜா கே.மஜீத் ஆகியோரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்பதால் அவர்களது சட்டப்படியான உரிமை நிலைநாட்டப்படுகிறது.


எனவே, அவர்கள் பதவியில் இருக்கும்போதே வக்ஃப் வாரியத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டது சட்டவிரோதம் என்பதால் தமிழக அரசின் உத்தரவு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் இருவரையும் தவிர்த்து, மற்ற உறுப்பினர்களின் பதவியை நிரப்ப தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம்’’ என்று தீர்ப்பளித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு