ஊடகத்தினர் மீது தொடரும் ஆளுங்கட்சி ஆதரவாளர்களின் தாக்குதல்.. காவல்துறையின் பாராமுகத்தால் வேதனையே மிச்சம்

பத்திரிக்கை, ஊடகத்துறை மற்றும் சமூக ஊடகவியலாளர்கள் கருத்துரிமை பாதுகாப்பு குறித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி - ஊடக கண்காணிப்புக் குழு தமிழக காவல்துறை இயக்குநரிடம் நேரில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதன் விவரம்:-


“இந்திய மாநிலங்களில் முன் மாதிரியான பாரம்பரியம் மிக்க தமிழக காவல்துறை தங்களைப் போன்ற நேர்மையான நெறிமுறைகளோடு மக்களுக்கான காவல் பணி புரியும் தலைமையின் கீழ் இயங்குவது உள்ளபடியே பெருமைக்குரிய விஷயமாகும். தங்கள் கவனத்திற்கு வந்த பெரும்பாலான பிரச்சினைகளில் நடவடிக்கை எடுக்க பட்டிருக்கின்றன என்றாலும் காவல்துறையைப் போன்றே மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினர் மீதான தனிநபர் தாக்குதல்கள் தற்போது தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன என்பதையும் அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.


குறிப்பாக, பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தனிநபர் தாக்குதலைத் தொடுக்கும் அரசியல் பின்புலம் கொண்ட சமூக விரோதிகள் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார்களில் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக, பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது இவர்கள் யாரேனும் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகின்ற பாரபட்ச போக்கு நிலவுகிறது


இதோடு, பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்கள் மீதான தனிநபர் தாக்குதலையும், தரம்கெட்ட, ஆபாசமான விமர்சனங்களையும் மத்திய, மாநில ஆளுங்கட்சிகளின்ஆதரவாளர்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதை காவல்துறை கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குரிய செயலாகும்.


இதேபோன்று தமிழகத்தில் அரசியல்மயப்படாத ஆனால் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இளைஞர்கள், சமூக ஊடகங்கள் வழியாக நியாயமான தங்கள் உரிமைக்கான குரலைப் பதிவிடுகிறபோது அவர்கள் தனிநபர் தாக்குதல்களுக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக, இளம்பெண்கள் தரக்குறைவாக, ஆபாசமாக விமர்சிக்கப்படுவதோடு மிரட்டலுக்கும் ஆளாகிறார்கள்.


இந்த மாதிரியான சமூகவிரோதிகளின் மீது புகார் கொடுத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் மெத்தனப்போக்கு கவலை தருவதாக இருக்கிறது. முக்கியமாக, பொதுவாழ்வில் ஈடுபட்டு மக்கள் பணியாற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக இயக்க நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது அபாண்டமாக அடிப்படையற்ற அவதூறுகளை வேண்டுமென்றே பரப்புகின்ற, கொலை மிரட்டல் விடுக்கின்ற சமூக விரோதிகள் (ஆளும் கட்சிகளின் மறைமுக ஆதரவாளர்கள்) மீது புகார் கொடுத்தால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை..


எனவே, இவற்றின் மீது தனிக்கவனம் செலுத்தி பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினருக்கும், சமூக அக்கறையோடு செயல்படும் தமிழக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்கி,பொதுவாழ்வில் ஈடுபட்டு மக்கள் பணியாற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக இயக்க நிர்வாகிகள் மற்றும் ஆர்வலர்கள் மீதான களங்கத்தை போக்கி ஜனநாயகத்தின் அடிநாதமான கருத்துரிமையைக் காத்திட தாங்கள் தங்களுக்கே உரிய வேகத்துடன் கூடிய விவேகமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.