சென்னையில் போலீசார் மீது தாக்குதல்... என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக் கொலை


சென்னை அயனாவரத்தில், கைது நடவடிக்கையின்போது காவலர் மீது அரிவாளால் தாக்குதல் நடத்திய கஞ்சா வியாபாரியும், ரவுடியுமான சங்கர் என்கிற நபர், சம்பவ இடத்திலேயே போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.


சென்னை அயனாவரம் பகுதியில் மாமூல் தர மறுத்ததாக அண்மையில் ஆதவன் சூப்பர்மார்க்கெட் உரிமையாளர் மீது ரவுடி சங்கர் கும்பல் தாக்குதல் நடத்தியது.


இந்த வழக்கில் ரவுடி சங்கரை போலீசார் தேடி வந்த நிலையில், அயனாவரம் நியூ ஆவடி சாலையில் அவன் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.


அங்கு ஆர்டிஓ சாலை எதிரே உள்ள புதர்பகுதியில் மறைந்து, கஞ்சா மூட்டைகளை பதுக்கி, விற்பனையில் ஈடுபட்டு வந்த ரவுடி சங்கரை பிடிக்க, இன்று அதிகாலை ஆய்வாளர் நடராஜ் தலைமையிலான போலீசார் சென்றனர். சம்பவ இடத்தில் ரவுடி சங்கரை நெருங்கிச் சென்று கைது செய்ய முயன்றபோது, அவன் அரிவாளை எடுத்து காவலர் முபாரக்கை இரு தோள்பட்டைகளிலும் வெட்டியுள்ளான்.


இதில் காவலர் முபாரக் நிலைகுலைந்து விழுந்ததை அடுத்து, சுதாரித்துக் கொண்ட ஆய்வாளர் நடராஜ் ரவுடி சங்கரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரவுடி சங்கர் உயிரிழந்தான்.


காயமடைந்த காவலர் முபாரக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


சுட்டுகொடல்லப்பட்ட ரவுடி உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காவலர் மீது தாக்குதல் நடத்தியதால் தற்காப்பிற்காக ரவுடி மீது சுட்டதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கஞ்சா வியாபாரத்தில் கொடி கட்டி பறந்த சங்கர், மாமூல் கேட்டு வியாபாரிகளை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட அவன் மீது, 4 கொலை வழக்குகள், ஒரு போதைப்பொருள் கடத்தல் வழக்கு உள்ளிட்ட 36 வழக்குகள் உள்ளன.


இரு தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் தனிப்படை காவலர் சுப்ரமணியன் மீது ரவுடி துரைமுத்து நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அதில் ரவுடி துரைமுத்துவும் உயிரிழந்த நிலையில், சென்னையில் காவலரை தாக்கிய ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. என்கவுன்டர் நடந்த இடத்தில் மூட்டை நிறைய கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது