ஆமை வேகத்தில் வேளச்சேரி மேம்பாலப் பணி..!

சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் 2 மேம்பாலங்கள் அமைக்கும் பணி, ஆமை வேகத்தில் நடப்பதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.


சென்னையில் வளர்ந்து வரும் புறநகர் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலை உள்ளது.


பல தடங்களில் ஓடும் மாநகரப் பேருந்துகள் இந்த சாலை வழியாக இயக்கப்படுகின்றன. இது தவிர கார்கள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுவதால் காலை, மாலை நேரங்களில் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


நெரிசலைக் குறைக்க வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில், தரமணி சாலை, தாம்பரம்- வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி 100அடி சாலைகளை இணைத்து இரு மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டது.


108 கோடி ரூபாய் செலவிலான இந்த பணிகள் நான்காண்டுகளாக நத்தை வேகத்தில் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதால் மண் துகள்கள் காற்றில் பரவி அப்பகுதியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது.


அப்பகுதி வழியாக செல்வோர் கொரோனாவிற்காக முக கவசம் போடவில்லை என்றாலும் மாசு கட்டுப்பாட்டிற்காக கட்டாயம் முக கவசம் அணிவதாக கூறுகின்றனர்.


போக்குவரத்நெரிசலை குறைப்பதற்காக கட்டப்படும் மேம்பால பணிகளால் மேலும் நெரிசல் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் மாநகர் பேருந்துகளும் இயங்கத் துவங்கினால் நிலைமை என்ன ஆகும் என சொல்லத் தேவையில்லை என்று வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.


விஜயநகர் பேருந்து நிலையம் அருகில் மெட்ரோ வாட்டருக்காக தோண்டப்பட்டுள்ள குழிகள் மற்றும் பழுதுபார்க்கும் பணியும் மெத்தனமாகவே நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் சுற்றி செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.


எனவே மேம்பாலம் கட்டுமான பணியை துரிதப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு