காவல் நிலையத்தில் ஆஜராக 7 வயது சிறுமிக்கு சம்மன் - பெற்றோர் அதிர்ச்சி..


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாயுமான் செட்டி தெரு பகுதியில் வசிக்கும் பாஸ்கர் என்பவரது மகள் அதிகை முத்தரசி. 7 வயதுடைய இந்த சிறுமிக்கு மீஞ்சூர் காவல் ஆய்வாளர் மதியரசன் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி ஊரடங்கு


நேரத்தில் சம்மன் அனுப்பியுள்ளது பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்தது. மீஞ்சூர் ஒன்றிய பொன்னேரி தொடக்கப்பள்ளியில் 71 மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில், இந்தப் பள்ளிக்கு என்று 1964-ம் ஆண்டு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் இருந்து 20 சென்ட் நிலம் ஒதுக்கியிருந்தனர்.


இந்த நிலத்தில் தற்போது வெறும் எட்டு சென்ட் மட்டுமே பள்ளியின் வசம் உள்ளது. பள்ளியில் தலைமையாசிரியர் சீதாலட்சுமி 3 ஆசிரியர்கள் என பணியாற்றி வரும் நிலையில் பள்ளிக்கு முறையான கட்டிடம் இல்லை. பள்ளியருகே குப்பை கொட்டப்படுகிறது. புதிய வகுப்பறை கட்டடம், விளையாட்டு மைதானம் வேண்டுமென்று மாணவி தரப்பில் அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.


இந்நிலையில் நீதிமன்றம் கடந்த மார்ச்மாதம் இரண்டாம் தேதி பள்ளிக்கு தேவையான கட்டிட வசதியை ஏற்படுத்தி தருவதுடன் சுற்றுச்சுவர் முறையாக அளவீடு செய்து கட்ட வேண்டும் என்றும் விளையாட்டு மைதானம் அமைத்து தரப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.


இந்த நிலையில் நீதிமன்ற ஆணையை அவமதிக்கும் விதமாக ஒரே நாளில் எந்த ஒரு அளவிடும் செய்யாமல் ஆறடி உயர சுவரையும் 60 அடி நீளத்திற்கு கட்டி முடிக்கப்பட்டது.


இரண்டாம் வகுப்பு மாணவி அதிகை முத்தரசி, நீதிமன்ற வாசலை தட்டியவுடன் பள்ளி உடனடியாக மாவட்ட நிர்வாகத்தால் சுண்ணாம்பு பூசி சீரமைக்கப்பட்டது.


இதனிடையே உரிய முறையில் அளவீடு செய்து மதில்சுவர் கட்டவில்லை என்றும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என்றும் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் உயர் படுத்தவில்லை என்றும் அதிகாரிகளுக்கு மாணவியின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.


இந்நிலையில் மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் மதே அரசனிடமிருந்து மாணவி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று வீட்டிற்கே நேரில் வந்து சம்மன் வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. UPDATE: இந்நிலையில் தற்போது மாணவி அதிகை முத்தரசி மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஆஜராக தேவையில்லை என்று காவல் துறை விளக்கம் அளித்துள்ளனர்.


வயதுசரிபார்க்காமல் தவறுதலாக சம்மன் அனுப்பியதாக தகவல் தெரிவித்துள்ளனர்.