வேலைக்குச் செல்ல தினமும் 40 கி.மீ சைக்கிள் பயணம் - மக்களின் அன்பை பெற்ற 'சைக்கிள் போலீஸ்'

சைக்கிள் மூலமாக தினமும் 40 கி.மீ. தூரம் தமிழக காவலர் ஒருவர் பணிக்குச் சென்று வருகிறார்.


விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக 32 வயதுடைய மோகன் என்பவர் பணியாற்றி வருகிறார்.


2009ஆம் ஆண்டு காவலராகத் தேர்வாகி, கடந்த 12 ஆண்டுகளாக காவல் துறையில் இருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் சைக்கிள் மூலமாக காவல் நிலையத்திற்கு வேலைக்குச் சென்று வருகிறார்.


வீட்டிலிருந்து 20கிமீ தொலைவிலிருக்கும் காவல் நிலையத்திற்கு, தினமும் வீட்டிலிருந்து சென்று வர 40கிமீ பயணம் மேற்கொள்கிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது இடது கால் மூட்டில் அடிபட்டுவிட்டது.


அதனையடுத்து சிகிச்சைக்குப் பிறகு உடல் தசைகளை சீராக்க சைக்கிள் ஓட்ட தொடங்கினார். இதையே தினமும் வழக்கமாக்கினார்.


அலுவலகத்திற்குச் சென்றுவர 40கி.மீ சைக்கிள் பயணம் செய்வதால் உடற்பயிற்சிக்கு மிகவும் உதவுவதாகக் கூறுகிறார். இதனால் மன அழுத்தம் குறைந்து, உடல்நிலை சீராக இருக்கிறது என்கிறார் மோகன். இவரை அப்பகுதி மக்கள் சைக்கிள் போலீஸ் என அன்புடன் அழைக்கின்றனர்.