ஓமலூர் அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் மோதல்

சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரியார் பல்கலைக்கழகம் அருகே தனியார் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. இதனிடையே தர்மபுரியை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி வழக்குரைஞர் பிரசாந்த் என்பவர் இன்று காலை தன்னுடைய காரில் அவ்வழியே வந்துள்ளார்.


அப்போது சுங்கவரி வசூலிப்பது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் பிரசாந்த் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர் பிரசாந்த் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஓமலூர் பகுதி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். ஓமலூர் பகுதி நிர்வாகிகளும் வந்த நிலையில் மேலும் மோதல் ஏற்பட்டுள்ளது.


இதில் ஆத்திரமடைந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் சுங்கச்சாவடியில் தடுப்பானை உடைத்து காரில் புறப்பட்டு சென்று விட்டனர். இந்த விடியோ சமூக வலைதளங்களை வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் காரணமாக ஓமலூர் சுங்க சாவடி பகுதியில் பரபரப்பு நிலவியது.