̀`மொத்த முதலீடும் முடங்கியது!' கலங்கும் சிறு குறு வியாபாரிகள்... மீள்வது எப்படி..தமிழ்நாட்டில் இப்போது எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.


கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மட்டும் எந்தத் தளர்வுகளும் இல்லாமல் ஊரடங்கு தொடரும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.


இந்த மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பயணம் மற்றும் தொழில் நடத்துவதற்கான தளர்வுகள் அறிவித்திருந்தாலும், மக்கள் வெளியில் வந்து பொருள்கள் வாங்குவதற்குத் தயக்கம் காட்டி வருகின்றனர்.


இதனால் மளிகைக் கடை, பழக்கடை, மொபைல் கடைகள் எனப் பல சிறு, குறு வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்திருக்கிறார்கள். இந்தியாவில் மொத்தம் 10 மில்லியன் முதல் 12 மில்லியன் வரை சிறு மற்றும் குறு விற்பனைக் கடைகள் உள்ளன. இவை அனைத்தும் மளிகைப் பொருள்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளாகும். ஊரடங்கு காரணமாக இவற்றில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.கொரோனா பயத்தின் காரணமாகவும், அரசின் கட்டுப்பாடுகள் காரணமாகவும் கடைகளின் உரிமையாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளதால் தற்போது இவை மூடப்பட்டுள்ளன.


இன்றைய நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா வைரஸ் பயத்தைக் காட்டியிருப்பதால், மூடப்பட்ட கடைகள் இனி வரும் நாள்களிலும் வழக்கம் போலச் செயல்படுமா என்பது சந்தேகமே.ஊரடங்கு காலகட்டத்திற்குப் பிறகு விநியோகஸ்தர்கள் வியாபாரிகளுக்கு பொருள்களைப் உடனடி பணத்திற்கே விற்க எண்ணுவார்கள்.


இதனால் கடை உரிமையாளர்களுக்குப் பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் கிடைக்காமல் போகலாம். ஏற்கெனவே பொருள்களின் வரத்து என்பது குறைந்தே காணப்படுகிறது. மக்களும் பொருளாதார நெருக்கடி காரணமாக தேவைக்கு மட்டுமே தற்போது வாங்கி வருகின்றனர். பெரும்பாலான கடைகளில் சில நாள்கள் வியாபாரமற்ற சூழ்நிலையே நீடிக்கிறது. சென்னை, கோவை மாதிரியான மெட்ரோ நகரங்களில் வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி ஊரிலிருந்தும் வந்துதான் அதிக மக்கள் கடை நடத்துகிறார்கள்.


இவர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதால் திரும்ப வருவதும் நிச்சயமற்றதே. மேலும் வெளி மாநிலங்களிலிருந்து கடையில் வேலை செய்யும் ஊழியர்களும் தற்போது பணியில் இல்லை.


இப்படி பல்வேறு காரணங்களால் கடைகள் அனைத்தும் மூடியே உள்ளன. முழுமையான ஊரடங்கிற்குப் பிறகும் இதில் பாதிக் கடைகளே மீண்டும் திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால், இந்நிலை இன்னும் 5 அல்லது 6 மாதத்திற்கு நீடிக்கலாம் எனத் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஊரடங்கால் ஸ்மார்ட்போன் விற்பனைக் கடைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.


தற்போது இவர்களுக்கு சில மொபைல் நிறுவனங்கள் உதவ முன்வந்துள்ளன. இந்தியாவின் மொத்த ஸ்மார்ட் போன் விற்பனையில் 62 சதவிகிதம் இந்த மாதிரியான கடைகளில் வாங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


மளிகைப் பொருள்கள் விற்பனையில் 20 சதவிகித விற்பனை சிறிய கடைகளில் நடைபெறுகிறது.இதுபற்றி, விற்பனை டிராக்கர் நிறுவனமான நீல்சன், ``இந்தியாவில் வேகமாக விற்பனையாகும் நுகர்வுப் பொருள்கள் கடந்த ஏப்ரல் மாதம் விற்பனையில் 34 சதவிகித சரிவைக் கண்டுள்ளன.


இதற்கு முக்கியக் காரணம் சிறிய கடைகளில் விற்பனை 38 சதவிகிதமாக சரிந்ததே ஆகும். அதேநேரம், பொருள்களின் தேவை 5 சதவிகிதம் உயர்ந்தது. எதிர்காலம் குறித்த பயம் வாட்டி வதைக்கிறது!கொரோனா தொற்றால் ஏற்பட்டிருக்கும் வியாபார மந்தநிலை சீராக இன்னும் 3 - 6 மாதங்கள் வரை ஆனாலும், நிச்சயமாகச் சிறு வியாபாரிகள் மீண்டு வருவதற்கே வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.


கொரோனாவுக்கு முன்பு இருந்ததைப்போல எந்தவொரு பிஸினஸும் இனி இருக்காது என்பதால், வியாபாரிகள் தங்களின் எதிர்கால பிஸினஸ் திட்டங்களை அதற்கு ஏற்றாற்போல மாற்றி அமைத்துக் கொள்வது நல்லது.


தொழில்நுட்ப ரீதியான விஷயங்களைத் தெரிந்துகொண்டு, அதை பிஸினஸுக்குள் கொண்டு வந்து மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வது ரொம்பவே முக்கியம்" என்றார்.ஊரடங்கு காலத்தில் கடை உரிமையாளர்கள் பயணம் செய்ய பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியவில்லை.


இதனால் பொருள்களை கொண்டு வருவதிலும் அதிக செலவினங்கள் ஏற்பட்டன. இதனுடன் விற்பனை இல்லாமல் கடைக்கான வாடகையையும் அவர்களால் செலுத்த இயலவில்லை. கடைக்கான மின்சாரச் செலவையும் வீணாக ஏற்க அவர்கள் தயாராக இல்லை.


இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களால் சிறிய கடைகள் பல இனி வரும் காலங்களில் மூடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக கணிசமான மக்கள், இணையம் மூலம் மளிகைப் பொருள்கள் வாங்கத் தொடங்கியுள்ளனர்.


இவர்களில் பெரும்பாலானோர் இதை ஊரடங்கிற்குப் பிறகு தொடரலாம். இதனால் வருகின்ற ஆறு ஏழு மாதங்களில் விற்பனை என்பது சிறிய கடைகள் வைத்திருப்பவர்களுக்குச் சவாலான ஒன்றுதான்.