கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் உயிரிழந்தது சாதாரண விஷயம் அல்ல என நீதிபதிகள் கருத்து; டிஜிபி, தூத்துக்குடி எஸ்.பி. ஆஜராகவும் உத்தரவு

கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் டிஜிபி, தூத்துக்குடி எஸ்.பி. காணொலி மூலம் மதியம் 12.30 மணிக்கு ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


முன்னதாக கோவில்பட்டி கிளை சிறையில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் வேண்டும் என வழக்கறிஞர் சூர்யபிரகாசம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு முறையீடு செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் பிரகாஷ்,புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, தந்தை, மகன் உயிரிழப்பு சாதாரண விஷயம் அல்ல என்றும் நீதிமன்ற காவலில் தந்தை, மகன் உயிரிழந்திருப்பதை கடுமையான நிகழ்வாக கருதுகிறோம் என்றும் கருத்து தெரிவித்தனர்.


மேலும் பதிவுத்துறைக்கு கடிதம் அளித்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் காணொலி மூலம் இன்று மதியம் 12.30 மணிக்கு தமிழக டிஜபி மற்றும் தூத்துக்குடி எஸ்பி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதனிடையே கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் உடல்களை, 3 மருத்துவா்கள் அடங்கிய குழு பிரேதப் பரிசோதனை செய்ய உயா் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் உயிரிழப்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.


ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி அவர்களை கைது செய்த சாத்தான்குளம் போலீசார், காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு அவர்கள் மரணம் அடைந்ததாகவும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.