ஓராண்டு முடிந்து குழந்தையும் பிறந்தாச்சு - திருமண நிதியுதவி & தாலிக்கு தங்கம் வந்து சேரவில்லை

தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக 5 முக்கிய திருமண உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப்பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு திருமண உதவிதிட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவி திட்டம் என ஐந்து வகையான திருமண நிதிஉதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.


இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு பணம் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் இத்திட்டத்துடன் தாலிக்கும் தங்கம் என்ற பெயரில் தங்கம் வழங்கும் திட்டத்தினை கடந்த 2011-ல் தொடங்கி வைத்தார். உயர்கல்வி பயின்ற பெண்களுக்கு 25 ஆயிரமும், பட்டதாரி பெண்களுக்கு 50 ஆயிரமும், இதனுடன் 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.