ரேஷன் கடை விசிட்; ஸ்பாட்டிலே சஸ்பெண்டு!’ - அதிரடி காட்டிய அமைச்சர் செல்லூர் ராஜுஅமைச்சரின் அதிரடியான இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசி மிக மோசமாக உள்ளது என்ற புகாரைத் தொடர்ந்து டூ வீலரில் ரேஷன் கடைக்கு அதிரடியாக சென்று, தவறு செய்த ஊழியர் மீது நடவடிக்கை எடுத்த அமைச்சர் செல்லூர் ராஜுவின் செயல் மதுரையில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை பெத்தானியாபுரத்தில் கட்சி சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார் அமைச்சர் செல்லூர் ராஜு. நிகழ்ச்சி முடிந்ததும் கிளம்பியவரிடம் கார்த்திகைசெல்வி என்பவர், `ரேஷன் கடையில் எடை குறைவாகவும், மிக மோசமானதாகவும் அரிசி வழங்குகிறார்கள்.


அரிசியில் கல்லும் புழுக்களும் அதிகம் உள்ளது. இதைப்பற்றி கேட்டால் கடைக்காரர் திட்டுகிறார்' என்றபடி பையில் கொண்டு வந்திருந்த அரிசியைக் காட்ட, உடனே கோபமான அமைச்சர் அருகில் இருந்த கட்சிக்காரரின் டூவீலரை எடுக்கச் சொன்னார்.


அதில் பின்னால் அமர்ந்தபடி சம்பந்தப்பட்ட பாண்டியராஜபுரம் ரேஷன் கடைக்குச் சென்றார். கூடவே அந்தப் பெண்ணையும் கட்சியினரிடம் அழைத்து வரச்சொன்னார். அமைச்சர் டூவீலரில் செல்வதை எதிர்பார்க்காத காவல்துறையினரும் கட்சியினரும் பதறியபடி அவர் பின்னால் சென்றார்கள்.


ரேஷன் கடை முன் அமைச்சர் வந்து நின்றதை அதிர்ச்சியுடன் பார்த்த ரேஷன் கடை ஊழியர்களிடம் கார்த்திகை செல்வியை அருகில் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினார். கடை விற்பனையாளர் தர்மேந்திரன் சொன்ன காரணத்தை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர், அவரை அங்கேயே சஸ்பெண்டு செய்வதாக அறிவித்தார். அது மட்டுமல்லாமல் கடைக்குச் சம்பந்தமில்லாத நபர் அங்கு இருந்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.


அமைச்சரின் அதிரடியான இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது