தமிழகத்தில் மோசமாகும் கொரோனா கேஸ்கள்.. கைகொடுக்காத கான்டாக்ட் டிரேசிங்.. திணறும் அதிகாரிகள்..தமிழகத்தில் நாளொன்றுக்கு கொரோனா பாதிப்பு 1000 பேரை தாண்டுவதால் கான்டாக்ட் டிரேசிங் முறை சுகாதார துறையினருக்கு கடினமாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.


கடந்த மாதம் 31-ஆம் தேதி முதல் நேற்று 7-ஆம் தேதி வரை தினமும் 1000-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் 1500-ஐ தாண்டியது. .


இதனால் சமூக பரவல் ஏற்பட்டுவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தொடக்கத்தில் கான்டாக்ட் டிரேசிங் மூலம் நோய் தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் இப்போது அந்த முறையைப் பயன்படுத்த முடியவில்லை என்றே தெரிகிறது. கேரளாவுக்கு கைகொடுத்த கான்டாக்ட் டிரேசிங் முறை நம்மை கைவிடுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில் கான்டாக்ட் டிரேசிங் முறையில் ஒரு கேஸில் மிகப் பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளோம். நாகர்கோவிலை சேர்ந்த ஒருவர் இ பால் இல்லாமல் மும்பையிலிருந்து புனேவுக்கு சாலை மார்க்கமாகவும், புனேவிலிருந்து பெங்களூருக்கு விமானம் மூலமாகவும், பெங்களூரிலிருந்து திருச்சிக்கு இன்னொரு விமானம் மூலமாகவும் பயணம் செய்தார்.


அவர் திருச்சியில் உள்ள ஹோட்டலில் தங்கிவிட்டு மறுநாள் ரயில் மூலம் நாகர்கோவிலை வந்தடைந்தார். அப்போது ரயில் நிலைய அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் எத்தனை பேருடன் தொடர்பில் இருந்தார் என்ற விவரங்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஏனெனில் அவர் மும்பை, புனே, பெங்களூர், திருச்சி, ஹோட்டல், நாகர்கோவில் என பல இடங்களில் சுற்றியுள்ளார். ரயில், விமானங்களில் பயணித்துள்ளார். இந்த விவகாரத்தில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது என்பது சவாலாக உள்ளது.


அது போல் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு அண்மையில் ஒரு இறுதிச் சடங்கிற்காக இருவர் வந்தனர். அவர்களுக்கு கொரோனா சோதனை எடுத்ததில் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களை கான்டாக்ட் டிரேசிங் செய்ததில் 100 பேரில் 35 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. தமிழகத்தில் இந்த 35 பேரும் யார் யாரை தொடர்பு கொண்டார்கள் என தெரியவில்லை. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கொரோனா கேஸ்கள் அதிகமாக இருக்கும்போது போலீஸாரின் உதவியுடன் கான்டாக்ட் டிரேசிங் செய்வது கடினமாக இருக்கிறது என்றார்கள்.


மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கான்டாக்ட் டிரேசிங் மூலம் நோய் பரவுவது அதிகமாகவே உள்ளது. தேசிய அளவில் ஒருவரிடம் இருந்து 6 பேருக்கு நோய் பரவுகிறது, என்றால் தமிழகத்தில் 14 பேருக்கு பரவுகிறது. இதுகுறித்து கொரோனா தடுப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறுகையில் மக்களை டிரேஸ் செய்து தனிமைப்படுத்தி, கொரோனா சோதனை செய்து சிகிச்சை அளிப்பதை காட்டிலும் வேறு சிறந்த வழி இல்லை.


3 முதல் 4 பேர் வரை உடனடியாக நாங்கள் தொடர்புகளை டிரேஸ் செய்கிறோம். பின்னர் 4 முதல் 5 பேர் வரை விரிவுப்படுத்துகிறோம் என்றார். கொரோனா இருக்கிறது இதுகுறித்து தொற்றுநோய் துறை மருத்துவர் கூறுகையில் கான்டாக்ட் டிரேசிங் முறை சில கேஸ்கள் இருந்தால் மட்டுமே கை கொடுக்கும். அதுவும் சென்னையில் கான்டாக்ட் டிரேசிங் செய்வது என்பது மிகவும் தாமதமானது.


அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. நாம் செய்ய வேண்டியது யாரை பார்த்தாலும் அவர்களுக்கும் கொரோனா இருக்கிறது என்று நம்பி நாம் விலகியிருப்பதுதான் என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்