மலேசியாவில் இருந்து வந்தவர் சென்னையில் உயிரிழப்பு: அதிகாரிகளின் அலட்சியமே காரணம்: முன்னாள் எம்எல்ஏ கண்டனம்

மலேசியாவில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் ஒருவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் நிஜாமுதீன், உயிரிழந்தவர் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.


கரோனோ தொற்று காரணமாக, பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். சென்னைக்கு வரும் பயணிகளைக் கேளம்பாக்கத்தில் உள்ள விஐடி கல்லூரி வளாகத்தில் உள்ள தனிமைப்படுத்துதல் முகாமில் சுமார் ஒரு வாரம் வரை தங்கவைத்து கரோனோ ஆய்வு சோதனைக்குப் பின் வீடு திரும்ப அனுமதிக்கின்றனர்.


அப்படிக் கடந்த 12-ம் தேதி மலேசியாவிலிருந்து வந்து முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த கூத்தாநல்லூரைச் சேர்ந்த முஹம்மது ஷரீப் என்பவர் நேற்று இரவு உயிரிழந்தார்.


இதுகுறித்து ‘இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய முன்னாள் எம்எல்ஏவான நிஜாமுதீன், “கடந்த 12-ம் தேதி சென்னை வந்த ஷரீப்புக்கு 13-ம் தேதி மாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.


இதுகுறித்து உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்க யாரும் முன்வரவில்லை. இச்சூழலில் நேற்று (14.6.2020 ) காலை மீண்டும் ஷரீப்புக்கு உடல் நிலை மோசமானது. இதுபற்றி மீண்டும் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றும் அசட்டையாக இருந்த அதிகாரிகள், அவருக்குச் சிகிச்சையளிப்பது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று மாலை சுமார் 7.30 மணி அளவில் முகமது ஷரீப் ரத்த வாந்தி எடுத்து, குளியல் அறையில் மயங்கிக் கிடந்துள்ளார்.


உடனடியாக இந்தச் செய்தியும் அங்கிருந்த அதிகாரிகளுக்குச் சொல்லப்பட்டது. அப்படியும் இரவு 9 மணிக்குத்தான் ஆம்புலன்ஸ் வந்ததுள்ளதாகத் தெரிகிறது. முகமது ஷரீப்பை பரிசோதித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.


சுமார் இருநூறுக்கும் அதிகமான நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமில், மருத்துவம் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் செய்து தராததாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலுமே அநியாயமாக ஒரு உயிர் பலியாகி உள்ளது. இதற்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்த ஷரீப்பின் குடும்பத்துக்கு, அரசு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.