85 அடி உயரத்தில் சிக்கிக்கொண்ட திமுக கொடி: மேலே ஏறி சரிசெய்த 62 வயது முதியவர்… மதுராந்தகத்தில் சுவாரஸ்ய சம்பவம்!

திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான அன்பழகன் கடந்த 10-ஆம் தேதி மறைந்ததையடுத்து திமுகவின் சார்பில் அக்கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் மூன்று நாட்கள் பறக்கவிடப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.


அதனைத் தொடர்ந்து திமுக கொடி கம்பங்களில் திமுகவின் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இந்நிலையில் மதுராந்தகம் நகரில் உள்ள 95 அடி கொடிக்கம்பத்தில் திமுகவின் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு இருந்தது.


3 நாள் துக்கம் அனுசரிப்பிற்கு பிறகு, நேற்று மீண்டும் கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றியபோது, கொடிக் கம்பத்தின் 85-வது அடியில் கொடி சிக்கி கொண்டது.


நகர செயலாளர் கே.குமார் முயற்சியினால் முன்னாள் மின்சார வாரிய ஊழியரும், தொ.மு.ச. உறுப்பினருமான மணி (62 வயது) என்ற முதியவர் 85 அடி உயரம் என்றும் பாராமல் கொடிக் கம்பத்தின் மீது ஏறி மேலே உள்ள சிக்கலை சரி செய்தார். அதனைத்தொடர்ந்து கொடி பறக்கவிடப்பட்டது.


இதே போல திருச்சி 10-வது மாநில மாநாட்டில் கழக கொடி கம்பத்தில் 70-வது அடியில் சிக்கிக்கொண்டது பின்னர் முசிறியை சேர்ந்த டிஜிட்டல் ரமேஷ் என்பவர் கொடி கம்பம் மேலே ஏறி சிக்கலை சரி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தக் கொடிக் கம்பம் செங்கல்பட்டு மாவட்டம் , மதுராந்தகம் நகரத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுராந்தகம் நகர கழகம் சார்பில் 95 அடி உயர கொடிக் கம்பத்தில் திமுக தலைவர் -மு.க.ஸ்டாலினால் கொடி ஏற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.