கொரோனாவுக்கு சிகிச்சை ரூ 5 லட்சம் பில் மூதாட்டி பலி ..! வசூல் மருத்துவமனை அவலம்

சென்னையில் "மிட் வே" என்ற தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட மூதாட்டியை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றபோது, 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பரிசோதித்த போது மூதாட்டி உயிரிழந்தது தெரியவந்தது.


சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த மெகருன்னிசா என்ற செவிலியர், கொரோனா பாதிப்புக்குள்ளான 52 வயதான தனது தாய் முனிராபேகத்தை சிகிச்சைக்காக கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள மிட்வே என்ற தனியார் மருத்துவமனையில் கடந்த 28 ந்தேதி சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு தனிமை சிகிச்சையில் வெண்டிலேட்டருடன் வைக்கப்பட்ட முனீரா பேகத்தின் உடல் நிலை குறித்த எக்ஸ்ரே ரிப்போர்ட்டுடன், அவரது சிகிச்சை வீடியோவையும் மெகருன்னிசாவின் வாட்ஸ் ஆப்புக்கு அனுப்பியுள்ளனர்.


தொடர்ந்து 3 தினங்கள் வீடியோ அனுப்பபட்ட நிலையில் அதன் பின்னர் எந்த ஒரு வீடியோ பதிவையும் அனுப்பவில்லை என கூறப்படுகின்றது. ஆனால், முனீரா பேகம் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை மிட் வே மருத்துவமனை நிர்வாகம் பெற்றதாக கூறப்படுகின்றது.


6 நாட்கள் முழுமையாக சிகிச்சையில் இருந்த நிலையில் 7 வது நாள் 5 லட்சத்து 23 ஆயிரத்து 745 ரூபாய்க்கு பில் கொடுத்து, மீதிப்பணத்தையும் கட்ட சொன்னதால் மிரண்டு போன மெகருன்னிசா, தனது தாயின் சிகிச்சை வீடியோவை கேட்டுள்ளார்.


மேலும் தன்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை என்று தெரிவித்த மெகருன்னிசா, தாயை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் போவதாகக் கூறி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.