என்ன செய்து விட்டது இந்த அரசு.... 12 கோடி பேர் வேலை இழந்தனர், 13 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் சென்றுள்ளனர்: தேஜஸ்வி யாதவ் விளாசல்

பிஹார் தேர்தலுக்காக பாஜக தலைவர் அமித் ஷா மெய்நிகர் பேரணி நடத்திய இதே தினத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி பிஹாரில் ஆளும் நிதிஷ்குமார் பாஜக கூட்டணி ஆட்சியை சரமாரியாக விமர்சித்தார்.


இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: கடந்த சில மாதங்களாக 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர், 13 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே சென்றுள்ளனர். 1 கோடியே 40 லட்சம் பேர் பட்டினி நிலைக்குச் சென்றுள்ளனர்.


ஆகவே இந்த மெய்நிகர் பேரணியில் உள்துறை அமைச்சர் இந்தக் கோடிக்கணக்கான மக்கள் அரசின் முடியாட்சித்த தனமான அணுகுமுறையினால் இழந்த தங்கள் வேலைகளை எப்படித் திரும்ப பெறுவார்கள் என்று பேசுவார் எதிர்பார்ப்பு இருந்தது.


இந்த 15 ஆண்டுகால தேஜகூ ஆட்சி பிஹாரின் 8-9 கோடி வேலையில்லாதோருக்கு என்ன செய்து விட்டது? என்ன செயல்திட்டம் வைத்துள்ளது? வேலைவாய்ப்பு, வளர்ச்சி, வர்த்தகம் என்ற பெயரில் அவர்கள் மக்களிடம் வோட்டு கேட்பார்களா? தொழிலாளர்களை ஏன் இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகின்றனர் என்பதற்கு உள்துறை அமைச்சர் விளக்கம் அளிப்பாரா? ஏன் அவர்களை உடல் ரீதியாக மனரீதியாக நிதிரீதியாக சித்ரவதை செய்கிறது


அரசு. மத்திய மாநில அரசுகள் தொழிலாலர்களுக்கு ரூ.10,000 தலா வழங்க வேண்டும். இந்த நெருக்கடி காலக்கட்டத்தில் தொழிலாளர்கள் நலன்களை கவனிப்பார்களா, மெய்நிகர் பேரணி நடத்துவார்களா? பிஹாரில் கொடுத்த வாக்குறுதி எதையும் பாஜக நிறைவேற்றவில்லை.


சிறப்பு நிவாரணத் தொகுப்பு எங்கே, பிஹார் சிறப்பு அந்தஸ்து எங்கே? 1.25 லட்சம் கோடி பிரதமர் அறிவித்த தொகுப்பின் தற்போதைய நிலை என்ன? இரட்டை இன்ஜின் அரசு பிஹாருக்காக 15 ஆண்டுகளாக என்ன செய்து விட்டது? பிஹாரில் வேலை வாய்ப்பை உருவாக்க தேஜகூ அரசு என்ன செய்து விட்டது? மாநிலத்தில் எத்தனை தொழிற்சாலைகள் திறக்கப்பட்டன? என்று சரமாரியாக விளாசியுள்ளார் தேஜஸ்வி யாதவ்.