ரிசர்வ் வங்கி விதிமுறையை மீறி மாதத் தவணை பிடித்த தனியார் வங்கி - போலீசில் புகார்

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் விதிமுறையை மீறி தனியார் வங்கி ஒன்று வாடிக்கையாளர் வங்கிக்கணக்கிலிருந்து மாதத் தவணை பிடித்ததாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் ஒருவர் புகார் .அளித்துள்ளார்.


இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி, பொதுமக்கள் வங்கிகளில் பெற்றுள்ள பல்வேறு கடன்களுக்கு மாதத் தவணையைச் செலுத்த 3 மாதங்கள் விலக்களித்தது. இந்நிலையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பைத் தனியார் வங்கி மீறியுள்ளதாக வானகரத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.


அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது “அம்பத்தூரில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான தலைமை வங்கியில் கடந்த 2002 ம் ஆண்டு முதல் நான் மணல் லாரி வாங்கியதற்கான வாகன கடன் உள்ளது.


இதற்கான மாதத் தவணையை மாதம் தவறாமல் செலுத்தி வந்தேன். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டதால் எனக்கு வருமானம் இல்லை. ஆகவே அரசின் உத்தரவை வங்கிகள் பின்பற்றும் என நம்பி இருந்த நான் முன்னதாகச் சேர்த்து வைத்திருந்த பணத்தை மட்டும் அடிப்படைத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்தேன்.


ஏப்ரல்மாதம் வரை கடனுக்கான தொகைப் பிடித்தம் செய்யப்படவில்லை. ஆனால் வங்கியோ இந்த மாதம் 5.5.2020 அன்று மாதத் தவணை தொகை 65,590 ரூபாயை பிடித்தம் செய்துள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.


புகாரை ஏற்றுக்கொண்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறை ஆய்வாளர் விஜயராகவன் வங்கி நிர்வாகத்தினை அழைத்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.