“சுட்டெரிக்கும் வெயிலில் ஜெட் வேகத்தில் பரவல்..”பந்தியாவில் கொரொனோ வைரஸ் பரவலில் வேகம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஓரளவு கட்டுக்குள் இருந்த நிலையில், சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெயிலில், ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. உலக அளவில் பாதிப்புள்ள முதல் 10 நாடுகளுக்குள் இந்தியாவும் முன்னேறி இருப்பது மத்திய, மாநில அரசுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


சீனாவின் ஊஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பர் இறுதியில் கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. முதலில் சீனாவின் மற்ற மாகாணங்களுக்கும், பின்னர் உலக நாடுகளுக்கும் இது பரவத் தொடங்கியது. கொரோனா வைரஸ், கடந்த சில மாதங்களாக மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், இந்தியாவில் மார்ச் மாதம் முதல் இதன் தாக்கம் உள்ளது.


மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதை தடுப்பது ஒன்றுதான், அதாவது சமூக பரவலை கட்டுப்படுத்துவது இப்போதுள்ள ஒரே தீர்வாக உள்ளது. சமூக பரவலை தடுக்கும் வகையில், இந்தியாவில் முதலில் ஜனதா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ச்சியாக, நாடு முழுவதும் மார்ச் 24ஆம் தேதி முதல் கட்ட ஊரடங்கும், ஏப்ரல் 15ஆம் தேதி இரண்டாம் கட்ட ஊரடங்கும், மே 3ஆம் தேதி மூன்றாம் கட்ட ஊரடங்கும், மே 17இல் நான்காம் கட்ட ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.


ஊரடங்கு காலத்தில், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், திரையரங்குகள், மால்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.


இதில், மே 31 வரை தற்போது அமலில் உள்ள நான்காவது கட்ட ஊரடங்கின் போது, பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதாவது நோய் பாதிப்பின் தன்மைக்கேற்ப பிரிக்கப்பட்ட பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களில், சிவப்பு தவிர்த்து மற்ற இரண்டில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.


இவ்வாறு, பல கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தியும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலானது கட்டுக்குள் இல்லை என்பது, கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையே சான்றாக உள்ளது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மே 26ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை , 1,38,845லிருந்து ,45, 380 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 4,167 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 57,721ல் இருந்து 60,491ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் 80, 722 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்தியாவை பொருத்தவரை மகாராஷ்டிரா தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு 52,667 பேருக்கு பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் 17,728, குஜராத் 14,460, டில்லி 15,053, ராஜஸ்தான் 7,300, ஆந்திரா 3,110, தெலுங்கானா1,920, கர்நாடகா 2,182, கேரளா 896 என்ற எண்ணிக்கையில் பாதிப்பை சந்தித்துள்ளன.


தமிழகத்தில் மே 26ஆம் தேதி நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,728 ஆகும். அதிகபட்சமாக சென்னையில் கொரோனாபாதிப்பு11,640ஆகும். கொரோனாவுக்கு தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக உள்ளது.


மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், கொரோனாவுக்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவது, பலரையும் கவலையடைய செய்துள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கும், இது பெரும் சவாலாக உள்ளது. பல கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் தான் எண்ணிக்கை பெருகுவதற்கு வழிவகுத்துவிட்டதோ என்று ஒரு தரப்பினர் புலம்பத் தொடங்கிவிட்டனர்.


பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, "மத்திய அரசு கொண்டு வந்த ஊரடங்கின் நோக்கம் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. அதன் விளைவை இந்தியா சந்தித்து வருகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார். 


அதே நேரம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருப்பதால், அவர்களின் வாயிலாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம்; அடுத்த சில தினங்களுக்கு இந்த அதிகரிப்பு இருக்கும்; பின்னர் கட்டுப்படும் என்று மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர்.


தற்போது கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இக்காலத்தில் கொரோனா பரவலின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையும் நிறைவேறவில்லை. அக்னி நட்சத்திரம் முடிந்து, ஜூன் மாதம் வெப்பநிலையும் குறையலாம் என்ற நிலையில், கொரோனாவின் தாக்கம் மேலும் அதிகரிக்குமோ என்ற கவலைகள் எழுந்துள்ளன.


ஒருசில உலகளாவிய அமைப்புகள் கணித்துள்ளபடி ஜூன், ஜூலையில் தான் இந்தியாவில் கொரோனா உச்சகட்டத்தில் இருக்குமோ என்ற பீதி ஒருபக்கம் இருக்க, நான்காம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்பதற்காக பல தளர்வுகளை மாநில மால் அரசுகள் அறிவித்த நிலையில், ஊரடங்கு பட ஜூன் 14 வரை நீட்டிக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தாவக்கின்றன.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......
Image
முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
Image
சமுதாயத்தினருக்கு, வாய்ப்பு தரவில்லை என்ற அதிருப்தி, அக்கட்சியில் எழுந்து உள்ளது.
Image