“சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடக்குமா”

தற்போதைய 2020ம் ஆண்டு கொரொனா பீதியுடன் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டோ , சட்டசபை தேர்தல் பரபரப்பால் தமிழகம் இன்னும் சுறுசுறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக சிதறிவிடும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமை வகித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பெரும் நெருக்கடியில் இருந்து கட்சியை மீட்டனர்.


மிகவும் சாதுர்யமாக ஆட்சியை நடத்தி, பல தரப்பினரின் அதிருப்திக்கு ஆளாகாமல் உள்ளது அதிமுக அரசு. அரசியல் களத்திலும் வியூகம் வகுத்து காய்களை நகர்த்தி, ஸ்டாலினின் தூக்கத்தை அதிமுக கெடுத்துவிட்டது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத மாறுபட்ட சூழலில், கமல், ரஜினி போன்ற நடிகர்களின் அரசியல் பிரவேசத்துக்கு மத்தியில், அடுத்த ஆண்டு தேர்தலுக்கு அதிமுக தயாராகி கொண்டிருந்தது.


திமுகவும், கடந்த ஆண்டின் கடைசி யிலேயே தேர்தல் கணக்குகளை போட்டு, களப்பணிகளை மேற்கொள்ள தொடங்கியது. தேர்தல் வியூகம் வகுக்க, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை, பல கோடிக்கு அமர்த்தி பணிகளை முடுக்கிவிட்டது. கட்சியை இதுவரை அறிவிக்காத ரஜினியும், மாநாடு நடத்தி தனது பலத்தை பரிசோதிக்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் தான், சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வைரஸ், இந்தியாவையும் பதம் பார்க்க தொடங்கியது.


களமும் தப்பவில்லை . தமிழகத்தில் அடுத்தாண்டு ஏப்ரல் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை, வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்க, அரசியல் கட்சிகள் திட்டமிட்டிருந்தன.


அந்த பணிகள், கொரோனாவால் தாமதமாகும் என்று தெரிகிறது. காரணம், தற்போதுள்ள சூழல் தேர்தல் பணிக்கு உகந்ததாக இல்லை. கொரொனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மே 18ம் தேதிக்கு பிறகே, ஓரளவுக்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் .


பொதுப் போக்குவரத்து தொடங்கவில்லை. தொழில் வர்த்தக நிறுவனங்கள் முழுமையாக செயல்பட ஆரம்பிக்கவில்லை. தேர்வுகளே இன்னும் முழுமையாக முடிக்கப்படாத நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கும் தேதியும் தெரியாது.


ஜூன் மாதம் 10ம் வகுப்பு தேர்வு, ஜூலையில் தேர்வு முடிவுகள், அதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் கல்வி நிறுவனங்களை திறக்கலாம் என்று அரசு உத்தேசித்திருப்பதாக கூறப்படுகிறது. அதன் பிறகு படிப்படியாக இயல்பு நிலை திரும்பி, மக்கள் சகஜ நிலைக்கு வர, மேலும் மூன்று மாதங்கள் ஆகலாம். அதற்குள், கொரொனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். தலைநகர் சென்னை தான், கொரொனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரொனாவின் பிடியில் இருந்து சென்னை முழுமையாக மீண்டால் தான், அரசு மற்றும் அரசியல் செயல்பாடுகள் சூடுபிடிக்கும்.


இதெல்லாம் உடனடியாக நடைபெறுவது சாத்தியமில்லை என்பதால், வரும் ஏப்ரல் – மே மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் நடப்பது கேள்விக்குறிதான் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.


கேர்கலக்கான பிள்ளையார்சுழி, வாக்காளர்பட்டியல் சரிபார்ப்பில் இருந்து தொடங்குகிறது. தற்போதுள்ள நிலையில் இப்பணிகளை அடுத்த ஓரிரு மாதங்களில் மேற்கொள்ள இயலாது. மேலும், அரசியல் கட்சிகளும் முடங்கிப் போயிருக்கும் மக்களை சந்திப்பது உடனடியாக சாத்தியமற்றது. வாழ்வாதாரம் இழந்து கடனில் சிக்கித் தவிக்கும் மக்களிடம் போய் அரசியல் பேசுவது எடுபடாது என்பதை அவை உணர்ந்துள்ளன.


இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. மத்தியில் உள்ள பாஜக அரசு, தமிழக சட்டமன்ற தேர்தலை தள்ளிப்போட வேண்டுமென்று விரும்புவதாக, டெல்லியில் பேச்சு அடிபடுகிறது. ஆட்சி அதிகாரத்தில் உள்ள அதிமுகவை பலவீனப்படுத்தினால், வரும் தேர்தலில் தனக்கு நல்லது என்று பாஜக நினைக்கிறதாம். எனவே, அதிமுகவின் செல்வாக்கை தகர்க்க, தேர்தலை தள்ளிப் போட்டு, தமிழகத்தில் ஆளுனர் ஆட்சியை சில மாதங்களுக்கு அமல் செய்யலாம் என்ற திட்டம் உள்ளதாம். இதன்மூலம் அதிமுக – திமுக இரண்டுமே பலவீனமாகும்; ரஜினி போன்றவர்களின் ஆதரவுடன் தமிழகத்தில் தாமரையை காலூன்றச் செய்யலாம் என்று, பாஜக மேலிடத்தின் கணக்கு என்கிறார்கள்.


சட்டசபைத் தேர்தல் தள்ளிப்போவதை அதிமுக, திமுக இரண்டுமே விரும்பவில்லை. ஆனால், கொரொனாவால் எழுந்துள்ள அசாதாரண சூழலும், பாரதிய ஜனதாவின் விருப்பமும், வரும் ஏப்ரல் மே மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தலுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......
Image
முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
Image
சமுதாயத்தினருக்கு, வாய்ப்பு தரவில்லை என்ற அதிருப்தி, அக்கட்சியில் எழுந்து உள்ளது.
Image