மகாராஷ்டிரா உறவினரை பார்க்க சென்று வந்ததால் தாயை வீட்டுக்குள் அனுமதிக்காத மகன்கள்

ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த கரீம் நகரில் உள்ள கிஷான் நகர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஷியாமளாவுக்கு 2 மகன்கள் உள்ளனர்.


இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மகாராஷ்டிரா மாநில சோலாப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மூதாட்டி சென்றிருந்தார். ஊரடங்கு அமலில் இருந்ததால் அவரால் மகாராஷ்டிராவில் இருந்து சொந்த ஊர் திரும்ப இயலவில்லை.


ஊரடங்கு நடைமுறை தளர்த்தப்பட்டு இருக்கும் தற்போதைய நிலையில், ரயிலில் கரீம்நகர் வந்தடைந்த மூதாட்டி, ேநற்று தனது வீட்டுக்கு சென்றார். ஆனால், ‘மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவில் கொரோனா தொற்று இருப்பதால், உனக்கும் கொரோனா தொற்று இருக்கலாம்.


எனவே வீட்டுக்குள் வரக்கூடாது’ என்று மூதாட்டியை வீட்டுக்குள் அனுமதிக்க அவரது மகன்கள் மறுத்துவிட்டனர். அதிர்ச்சியடைந்த மூதாட்டி, மகன்களின் செயல் காரணமாக எங்கும் செல்ல இயலாமல் வீதியில் நிலைக்கு தள்ளப்பட்டார்.


மேலும், உணவு, குடிநீர் ஆகியவை கிடைக்காமல் திண்டாடி வருகிறார். அவருடைய நிலையை பார்த்த உள்ளூர் மக்கள் உணவு வழங்கி உதவி வருகின்றனர்.


கொரோனா தொற்று தன்னுடைய தாய்க்கு ஏற்பட்டிருக்கும் என்று கருதும் அவருடைய மகன்கள், பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதை தவிர்த்து, அவரை புறக்கணித்து இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளூர் மக்கள் கூறி வருகின்றனர். இதுகுறித்து கரீம்நகர் மாநகராட்சியின் பிரிவு உறுப்பினர் எட்லா அசோக் கூறுகையில், ‘மகாராஷ்டிராவின் சோலாப்பூரிலிருந்து மூதாட்டி திரும்பினார். அவரது மூத்த மகனும் அவரது மனைவியும் அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.


மூதாட்டி ஆரோக்கியமாகதான் உள்ளார். அவர் கொரோனா நோயாளி அல்ல. ஆனால் அவரது மகன்கள் ஏற்கவில்லை. இளைய மகன், தாய் வந்திருப்பதை அறிந்து வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.


உள்ளூர் மக்களின் அறிவுரைக்கு பின், மூதாட்டியை அவரது மூத்த மகன் ஏற்றுக்கொண்டார். இருந்தும், மூதாட்டி கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்.


ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், அவர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைக்கப்படுவார்’ என்றார்.


இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகன்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று ச்சரித்தனர். போலீஸ் எச்சரிக்கையால், மூதாட்டி ஷியாமளாவை மூத்த மகன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.