நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வால் கடைகள் திறப்பு: கார்கள், ஆட்டோக்கள் ஓடின

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியதால் ஊரடங்கு உத்தரவு ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளதால் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.


கார்கள், ஆட்டோக்களும் ஓரளவு ஓடின. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம்தேதி முதல் மே 3ம்தேதி நேற்று வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.


இந்நிலையில் மே 17ம்தேதிவரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. கொரோனா பாதித்த பகுதிகளை மூன்று மண்டலங்களாக மத்திய அரசு பிரித்துள்ளது.


அதில் கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளை சிகப்பு மண்டலமாவும், குறைவான பாதிப்பு உள்ள பகுதியை ஆரஞ்சு மண்டலமாகவும், பாதிப்பு இல்லா பகுதியை பச்சை மண்டலமாகவும் பிரித்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சிகப்பு மண்டலத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்படுகிறது. ஆரஞ்சு மண்டலத்தில் கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளது.


பச்சை மண்டலத்தில் கட்டுப்பாடுகள் இல்லாத நிலை தொடர்கிறது. இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளதையடுத்து சிகப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறி உள்ளன.


மேலும் இம்மூன்று மாவட்டங்களும் பச்சை மண்டலத்தை நோக்கி பயணிக்க துவங்கி உள்ளன. தற்போது ஆரஞ்சு மண்டல பட்டியலில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


ஆகவே இம்மண்டலங்களில் உள்ள ஏசி வசதியில்லாத ஜவுளிக்கடைகள், கட்டுமான பணிக்கான பொருட்கள் விற்பனை செய்யும் சிமென்ட், செங்கல், மணல், கம்பிகள் விற்பனை செய்யும் கடைகள், மின்சாதனங்கள் விற்பனை செய்யும் கடைகள், செல்போன், கம்ப்யூட்டர், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், ஏசி வசதி இல்லாத தங்க நகை கடைகள் சமூக இடைவெளியை பின்றி அரசு விதிமுறைகளுடன், மாவட்ட நிர்வாக அனுமதி பெற்று செயல்பட உத்தரவிடப்பட்டது.


மேலும் கட்டிட தொழிலாளர்கள், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட தொழிலாளர்கள் மாவட்ட நிர்வாக அனுமதி பெற்று தொழில்களில் ஈடுபடலாம். கட்டிட பணிகள் நடைபெறும் இடத்தில் கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்து பணி செய்யலாம் எனவும் அரசு வழிகாட்டி முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்டிட பணிகளை துவங்கவும் கட்டிட கான்ட்ராக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.


மேலும் அனைத்து அரசு துறை பணியாளர்களும் 30 சதவீதம் பணிக்கு வரவும் அரசு உத்தரவிட்டுள்ளதால் அரசு அலுவலக பணிகளும் நடந்தன. இதையடுத்து கடந்த 40 நாட்களாக கடைகள் திறக்கப்படாத நிலையில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.


தற்போது ஆரஞ்சு மண்டலத்தில் சில தளர்வுகளுடன் கடைகள் திறக்கப்பட்டன. இதுபோல் கார்கள், ஆட்டோக்கள் ஓரளவு ஓடின. வழக்கத்தைவிட அதிக அளவில் இருசக்கர வாகனங்களும் சாலைகளில் சென்றன. ஆனால் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் இயக்கப்படாத காரணத்தால் பஸ் நிலையங்கள், முக்கிய பகுதிகளில் கடைகளில் விற்பனை இன்றி காணப்பட்டது.


ஊரடங்குஉத்தரவு காலத்தில் செயல்பட்டு வந்த அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் காய்கறிகடைகள், பலசரக்கு கடைகள், இறைச்சி கடைகளில் மட்டும் வழக்கம் போல் மக்கள் கூட்டம் காணப்பட்டது.


தொற்று அதிகரிக்கும் அபாயம்
கொரோனா தாக்கம் அதிகமாக பரவும் சென்னையிலிருந்து இ-பாஸ் மூலம் விண்ணப்பித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அதிக அளவில் பொதுமக்கள், தொழிலாளர்கள், பணியாளர்கள் வருகின்றனர்.


ஒருவேளை அவர்களுக்கு கொரோனா இருக்கும் பட்சத்தில் தற்போது ஆரஞ்சு மண்டலமாக இருக்கும் நெல்லை, தூத்துக்குடி மறுபடியும் சிவப்பு மண்டலமாக மாறி விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு ஏற்றாற்போல் இன்று காலை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் சாலையில் சென்றதை காண முடிந்தது.


அதேபோல் வழக்கத்திற்கு மாறாக இன்று அதிகளவில் மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டனர். இதனால் ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள இம்மூன்று மாவட்டங்களிலும் மீண்டும் தொற்று அதிகரித்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.