பாதிப்பு அதிகரிக்கும்; முக கவசம் கட்டாயம்: ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: ''கோயம்பேடு காய்கறி சந்தையாலும், வட சென்னையிலும், கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், சென்னையில் வரும் நாட்களில், தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.


"உள்ளாடை அணிவதை போல, முகக் கவசம் அணிவதையும் கட்டாயமாக்க வேண்டும்,'' என, பொதுமக்களுக்கு, கொரோனா நோய் தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சென்னை, ராயபுரம் மண்டல அலுவலகத்தில், கொரோனா தடுப்பு அதிகாரி, ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: கொரோனா பரிசோதனையை அதிகரித்துள்ளதால், சென்னையில், நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்த ஐந்து நாட்களுக்கு, இந்த நிலை தொடரும்; அதற்காக, மக்கள் பயப்பட வேண்டாம்.


கொரோனா என்ற கண்ணுக்கு தெரியாத கிருமியுடன் நடக்கும் போரில், மக்கள் தங்களை, சிப்பாயாக மாற்றிக் கொள்ள வேண்டும். தொண்டை, மூக்கு வழியாக, கொரோனா வைரஸ் பரவுவதால், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


மேலும், இரவு நேரங்களில், 30 சதவீத பொதுமக்கள், முகக் கவசம் அணியாமல் அலட்சியமாக செல்கின்றனர். உள்ளாடை அணிவது போல, மக்கள் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். முகக் கவசம் அணிவதால், கொரோனா நோயாளிகள் அருகில் இருந்தாலும், நோய் தொற்றுவது தவிர்க்கப்படும்.


இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் பரிசோதனை அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில் உள்ள, 200 வார்டுகளில், 119 வார்டுகளில், 10க்கும் குறைவானோர்; அடுத்த, 60 வார்டுகளில், 11 முதல், 30 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.


இரண்டு வார்டுகளில் மட்டுமே, 200க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் கோரிக்கையை ஏற்று, இனி, கொரோனா பாதிப்பு கண்டறியப்படும், வீடு மட்டும் முடக்கப்படும். அடுக்குமாடி குடியிருப்புகளில், சம்பந்தப்பட்ட, 'பிளாக்' மட்டும் முடக்கப்படும்.


வெளிநாடுகளில் இருந்து, 400க்கும் மேற்பட்ட தமிழர்கள், சென்னை அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.


வட சென்னையில் எடுக்கப்படும், கொரோனா பரிசோதனையில், ஒரே குடும்பத்தை சேர்ந்தோரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.அதேபோல, முதியோர், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளோரும், அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சென்னையில், 0.68 சதவீதம் என, இறப்பு விகிதம் குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு, அவர்களின் விருப்பத்தின்படி, சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவம் வழங்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
'விழிப்போடு இருங்கள்'


சென்னை மாநகராட்சி ஆணையர், பிரகாஷ் கூறியதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, தினமும் அதிகரித்து வருவதால், மக்கள் பீதியோ, வருத்தமோ அடைய வேண்டாம். கொரோனா தொற்று எங்கிருந்து வேண்டுமானாலும் பரவலாம்; மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.


பொதுமக்கள்தனிமைப்படுத்தப்படும் வார்டுகளில், சிகிச்சைக்கு பணம் கேட்பதாக கூறப்படும் தகவல் தவறானது. சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த ஒடிசா, பீஹார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலத்தவர்களை, சொந்த ஊருக்கு அனுப்பும் பணி துரித கதியில் நடந்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......
Image
முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
Image
சமுதாயத்தினருக்கு, வாய்ப்பு தரவில்லை என்ற அதிருப்தி, அக்கட்சியில் எழுந்து உள்ளது.
Image