கொரோனா: பச்சை மண்டலமானது காரைக்கால் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

காரைக்கால் பச்சை மண்டலமாக மாறியுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, புதுச்சேரியில் நேற்று 41 பேருக்கு உமிழ்நீர் சோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.


காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவருக்கு தொற்று இருந்தததால் அவர் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவருக்கு கொரோனா நோய் தொற்று இல்லை. ஆரஞ்சு மண்டலமாக இருந்த காரைக்கால் தற்போது பச்சை மண்டலமாக உள்ளது.


தற்போது புதுச்சேரியில் 3 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகள் தற்போது பச்சை மண்டலமாக உள்ளன என்றார்.


மேலும், உமிழ்நீர் பரிசோதனையில் புதுச்சேரி இரண்டாவது இடத்தில உள்ளது. 1 லட்சம் பேருக்கு 398 பேர் உமிழ்நீர் எடுத்து செயல்படுத்தி வருகின்றோம் என்று கூறிய அவர், ஊரடங்கு உத்தரவைத் தளர்த்துவதற்கு மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. பிரதமர் 17ம் தேதி அறிவித்த பின்பு புதுச்சேரியில் அறிவிப்போம் என்றார்.


மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்த நாராயணசாமி, மக்கள் பொறுப்புடன் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்; முமுக்கவசம் அணிய வேண்டும். கொரோனா நோய் தொற்று பரவாமல் பாடுபடுகின்ற அனைத்து துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி என்றார்.