சென்னையில் கரோனா தொற்று அதிகரிப்பு: ஒத்துழைக்காத கோயம்பேடு வியாபாரிகள் சங்க நிர்வாகிகளே காரணம்: முதல்வர் பேச்சு

சென்னையில் கரோனா தொற்று அதிகரிக்க காரணம் அரசின் கோரிக்கையை அங்கிருக்கின்ற வியாபார நிர்வாகிகள் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டு விடும் என்ற அச்சத்தின் காரணமாக அவர்கள், அரசால் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட காய்கறி மார்க்கெட் செல்ல மறுத்ததே காரணம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் ஆட்சியர்களிடம் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்திய முதல்வர் பின்னர் அவர்களிடம் பேசியதாவது:


“இன்றைக்கு சென்னையை பொறுத்தவரைக்கும், நோய் பரவுவற்கு காரணம் நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல சென்னை மாநகரம் அதிகமாக மக்கள் வசிக்கின்ற பகுதியாக இருக்கின்றது. சென்னை மாநகராட்சியில் மட்டும் 26 லட்சம் பேர் குடிசைப் பகுதியிலே வசித்து வருகின்றார்கள். நெருக்கமான பகுதி, குறுகலான தெரு, அதிகமான மக்கள் வசிக்கின்றார்கள். ஆகவே, எளிதில் நோய் தொற்று ஏற்படுகின்ற சூழ்நிலை உள்ளது.


அதுமட்டுமல்லாமல், சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட் ஆசியாவிலேயே மிகப்பெரிய மார்க்கெட். 1996-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு, 3941 கடைகள் இங்கே இயங்கி கொண்டிருக்கின்றன. இந்த மார்க்கெட்டில் சுமார் 20,000 பேர் பணிபுரிந்து வருகின்றார்கள்.


அதிலே வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், லாரிகளில் வருகின்ற சரக்குகளை இறக்குகின்ற தொழிலாளர்கள், சில்லறை வியாபாரிகள் கொண்டு வருகின்ற வாகனங்களுக்கு காய்கறிகளை ஏற்றக்கூடிய தொழிலாளர்கள் என சுமார் 20,000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.


இங்கு தொற்று ஏற்படும் என்று ஏற்கனவே நம்முடைய உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் 19.3.2020 அன்று சிஎம்டிஏ அதிகாரிகள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.


இங்கே அதிகமான பேர் குழுமியிருக்கின்ற காரணத்தினாலே நோய் தொற்று ஏற்பட்டுவிடும், ஆகவே அரசு உங்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து கொடுக்கும், நீங்கள் தற்காலிக மார்க்கெட் அமைக்கக்கூடிய பகுதியிலே சென்று காய்கறி விற்பனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.


ஆனால் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். நாங்கள் இங்கேதான் வியாபாரம் செய்ய முடியும். ஏனென்றால் வேறு பகுதியிலே சென்று விற்பனையை துவங்கினால் மிகுந்த நஷ்டத்திற்கு உள்ளாகிவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக அவர்கள் சென்னைக்கு வெளியிலே அரசால் அமைக்கக்கூடிய தற்காலிக மார்க்கெட்டிற்கு செல்ல விரும்பவில்லை.


தொடர்ந்து பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. துணை முதல்வர் 29.3.2020 அன்று நேரடியாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்று அங்கிருக்கின்ற நிலவரத்தை பார்வையிட்டார்கள். அப்பொழுதும் அங்கே இருக்கின்ற சங்க நிர்வாகிகளிடத்திலே, இங்கே அதிக அளவிலேயே மக்கள் கூடுகின்றார்கள், ஆகவே தொற்று ஏற்பட்டுவிடும்.


தேர்வு செய்யப்படுகின்ற தற்காலிக மார்க்கெட்டிற்கு நீங்கள் சென்றால் உங்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும், தொற்றை தடுக்க முடியும் என்று அவர்கள் எடுத்து சொன்னார்கள். ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை.


அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து அரசு முயற்சி செய்து வந்தது. 6.4.2020 அன்று துணை முதல்வர் தலைமைச் செயலகத்திலே அவருடைய அறையிலே வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். வியாபாரிகளும் பாதிப்பார்கள், தொழிலாளர்களும் பாதிப்பார்கள், வருகின்ற மக்களும் பாதிக்கப்படுவார்கள்.


இதையெல்லாம் உணர்ந்து அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு நீங்கள் துணை நிற்க வேண்டும். அரசு தற்காலிக அமைக்கின்ற அந்த மார்க்கெட்டிற்கு நீங்கள் செல்கின்ற போது உங்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். அதனால் இந்த தொற்று பரவலை தடுக்க முடியும் என்று எடுத்து சொன்னார்கள்.


ஆனால் சங்க நிர்வாகிகள் நாங்கள் அங்கே இருந்து வெளியிலே சென்று வியாபாரம் செய்தால் நஷ்டத்திற்கு ஆளாகிவிடுவோம் என்ற அச்ச உணர்விலேயே அரசு சொல்கின்ற கருத்தை ஏற்கவில்லை.


மீண்டும் துணை முதல்வர் 11.4.2020 அன்று கோயம்பேடு சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இங்கே இருக்கின்ற பிரச்சனையை உணர்ந்து நீங்கள் அரசிற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அப்பொழுதும் எடுத்து சொன்னார்.


இன்றைக்கு தமிழகம் முழுவதும் இருக்கின்ற காய்கறி கடைகளை நாங்கள் மாற்றி அமைத்திருக்கின்றோம். ஆனால் கோயம்பேடு பகுதியிலே யாரும் முகக்கவசம் அணிவதில்லை, சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. ஆகவே நீங்கள் வேறு இடத்திற்கு மாற்றி சென்றால் தான் இந்த நோய் பரவலை தடுக்க முடியும் என்ற கருத்தை சொன்னார்.


ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. அரசு ஏற்பாடு செய்யக்கூடிய தற்காலிக காய்கறி கடைக்கு சென்றால் தங்களுடைய தொழில் கடுமையாக பாதிக்கும், அந்த நிலையை தான் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருந்தார்கள்.


இருந்தாலும் அரசாங்கம் எடுத்து கூறியது. தொற்று பாதிக்கப்பட்டுவிட்டால் ஒட்டுமொத்தமாக கடைகளை மூடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும், இதையெல்லாம் நீங்கள் உணர்ந்து அரசிற்கு ஒத்துழைப்பு கொடுத்து, அரசு ஏற்படுத்துக்கின்ற தற்காலிக மார்க்கெட்டிற்கு சென்றால் இந்த பிரச்சனை தீர்க்கப்படும், நீங்கள் சிறப்பாக வியாபாரம் செய்யலாம், தொற்றும் ஏற்படாமல் இருக்கும் என்ற செய்தியை சொன்னார். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மீண்டும் 24.4.2020 அன்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.


அதுமட்டுமல்லாமல் நம்முடைய மாநகராட்சி ஆணையரும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதோடு இங்கே இருக்கின்ற உயரதிகாரிகள் நம்முடைய காவல்துறை ஆணையாளர் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள், சிஎம்டிஏ அதிகாரிகள் நேரடியாக அங்கே சென்று கூட அவர்களிடத்திலே வலியுறுத்தி சொன்னார்கள்.


நோய் தொற்று ஏற்பட்டுவிட்டால் இங்கே தொழில் செய்து வருபவர்கள் அத்தனைபேரும் கடுமையாக பாதிக்கப்பட்டுவிடுவீர்கள். ஆகவே, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடைய ஆலோசனையின்படி தான் நாங்கள் வந்திருக்கின்றோம்.


அத்தனை வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும், தொழில் செய்கின்ற தொழிலாளர்கள் அத்தனைபேருக்கும் எடுத்துச் சொல்லி, நீங்கள் இந்த மார்க்கெட்டை அரசால் வெளியிலே தேர்வு செய்த இடத்திற்கு நீங்கள் சென்றால் இந்த நோய் பரவலை தடுக்க முடியும் என்ற கருத்தை சொன்னார்கள்.


அதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். ஆகவே, இப்படி பலமுறை கோயம்பேடு சந்தை நிர்வாகிகளை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.


அரசு கடும் முயற்சி எடுத்தது. ஆனால் வியாபாரிகளை பொறுத்தவரைக்கும் வேறு இடத்திற்கு சென்று மார்க்கெட்டை துவங்கினால் தங்களுடைய வியாபாரம் பாதிக்கப்பட்டுவிடும், நஷ்டத்திற்கு ஆளாகிவிடும் என்ற எண்ணத்திலே இருந்துவிட்ட காரணத்தினால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டது.


இன்றைக்கு கோயம்பேட்டில் இருந்து அதிகமான பேர் வெளிமாவட்டத்திற்கு சென்ற காரணத்தினாலே, அந்த மாவட்டங்களிலே நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கின்றது. சென்னையிலும் இந்த எண்ணிக்கை உயர்ந்ததற்கு காரணம் இதுதான்.


அரசைப் பொறுத்தவரைக்கும் இந்த கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடுமையான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பலமுறை கோயம்பேடு மார்க்கெட் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.


ஆனால், அங்கு இருக்கின்றவர்கள் தங்களுடைய விற்பனை பாதிக்கப்பட்டு விடும், அதனால் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகிவிடுவார்கள் என்ற எண்ணத்தில் இருந்த காரணத்தினாலே அவர்கள் வேறு இடத்திற்கு செல்ல மறுத்தார்கள்.


இருந்தாலும், அரசு இந்த நோய் பரவல் ஏற்பட்டவுடனேயே அந்த மார்க்கெட் மூடப்பட்டு, அந்த வியாபார சங்கங்களை அழைத்து இனி இங்கே காய்கறி விற்பனை நடக்க அரசு அனுமதிக்காது என்ற செய்தியைச் சொன்னவுடன் அவர்களும் ஒத்துக் கொண்டார்கள்.


திருமழிசை பகுதியிலே மார்க்கெட் அமைக்கப்படும் என்ற செய்தியைச் சொன்னோம். அவர்களும் ஏற்றுக் கொண்டு அந்தப் பகுதிக்கு அவர்கள் ஒத்துழைப்பை நல்கினார்கள். அங்கே மார்க்கெட் அமைக்கப்பட்டு இப்பொழுது 10.5.2020 மாலையிலிருந்து அந்த காய்கறி மார்க்கெட் பணியை துவங்கி இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


ஆகவே, அரசைப் பொறுத்தவரைக்கும் இந்த நோய் பரவலைத் தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, அதனால் கோயம்பேடு பகுதியிலே நோய் பரவல் அதிகமாக ஏற்பட்டு விட்டது என்று இன்றைக்கு பல ஊடகங்களில், செய்திகளிலும் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். அது உண்மைக்கு புறம்பானது. நான் சொன்ன செய்திகளின் அடிப்படையிலே பல்வேறு முயற்சிகள் அரசால் எடுக்கப்பட்டது.


ஆனால் அங்கிருக்கின்ற வியாபார நிர்வாகிகள் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டு விடும் என்ற அச்சத்தின் காரணமாக அவர்கள், அரசால் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட காய்கறி மார்க்கெட் செல்ல மறுத்தார்கள், இதுதான் உண்மை நிலை என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துகின்றேன்”.இவ்வாறு முதல்வர் பேசினார்.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......
Image
முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
Image
சமுதாயத்தினருக்கு, வாய்ப்பு தரவில்லை என்ற அதிருப்தி, அக்கட்சியில் எழுந்து உள்ளது.
Image