WHO பெயரில் மோசடியில் ஈடுபடும் சைபர் கிரிமினல்கள்!

சர்வதேச பரவல் நோயான கொரோனா வைரஸ் (Covid-19) தொற்றை பயன்படுத்தி ஹேக்கர்களும் சைபர் குற்றவாளிகளும் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 


சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதனால் ஒட்டுமொத்த உலக மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதிக்கப்பட்டுள்ளது.


இந்த இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி சமூக விரோதிகளும், ஹேக்கர்கள் மற்றும் சைபர் குற்றவாளிகள் என பலர் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர்.


குறிப்பாக அவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு உலக சுகாதார அமைப்பின் (WHO) பெயரை பயன்படுத்துகின்றனர் என்பதே அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாக உள்ளது.  


மோசடி நடைபெறும் விதம்: 


மோசடியில் ஈடுபடும் ஹேக்கர்களும், சைபர் குற்றவாளிகளும் உலக சுகாதார நிறுவனத்தின் பெயரில் இ-மெயில், வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்புகின்றனர்.


மேலும் உலக சுகாதார அமைப்பில் இருந்தோ அல்லது அதன் கிளைகளில் இருந்தோ அழைக்கிறோம் எனக்கூறி போன் செய்கின்றனர் அல்லது குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். 


இவ்வாறு மக்களை தொடர்புகொள்ளும் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறோம் என்று தெரிவிக்கின்றனர்.


பின்னர் பணவரிவர்த்தனைக்கான User name மற்றும் Pass word போன்ற தனிப்பட்ட தகவல்களை கேட்கின்றனர்.


அதன் மூலம் உங்களுடைய வங்கி கணக்கையோ அல்லது மொபைல் போனையோ ஹேக் செய்து அதிலிருந்து பணத்தையோ அல்லது உங்களுடைய தனிப்பட்ட மற்றும் அந்தரங்க ரகசியங்களையோ திருடுகின்றனர்.


மேலும் உங்களையே நேரடியாக ஏதேனும் ஒரு வங்கி கணக்கு எண்ணைக் கொடுத்து அதில் பணம் செலுத்த கூறுகின்றனர். இதற்கு WHO-வின் பெயரையும் பயன்படுத்துகின்றனர்.


மேலும் அவர்கள் WHO அமைப்பில் இருந்து மெயில் அனுப்புவது போல அனுப்புகின்றனர். அந்த மெயில்கள் எல்லாம் xxxx@who.com அல்லது xxxx@who.org என்று முடியும் இமெயில் முகவரியிலிருந்து அனுப்பப்படுகிறது.


இபொது மக்கள் இது குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 


உலக சுகாதார அமைப்பின் விளக்கம்: 


உலக சுகாதார அமைப்பின் பெயரில் உலகளவில் நடைபெறும் இந்த மோசடி குறித்து அதனுடைய அதிகாரப்பூர்வ இணையதளமான www.who.int என்ற இணையதளத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


அந்த விளக்கத்தில் உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் தொற்றான சர்வதேச பரவல் நோயை கட்டுப்படுத்துவதற்கு நிவாரண நிதியாக Covid19- Solidarity Response Fund என்ற பெயரில் மட்டும் நிதி சேகரிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.


மேலும் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள லிங்கின் மூலமாக மட்டுமே நிதி சேகரிக்கப்படுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.


( https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/donate )


கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு உலக சுகாதார நிறுவனம் எந்த ஒரு இ-மெயிலோ, குறுஞ்செய்தியோ, வாட்ஸ் அப் மெசேஜ் மற்றும் அழைப்புகளோ செய்வதில்லை. 


பொது மக்கள் யாரேனும் உலக சுகாதார அமைப்பிடம் ஏதேனும் சந்தேகம் கேட்டு மெயில் அனுப்பினால் மட்டுமே அதற்கான விளக்கத்தை WHO மெயில் மூலமாக பதில் அளிக்கும்.


அவ்வாறு பதில் அளிக்கும் மெயில்களும் xxxxx@who.int என்று முடியும் இ-மெயில் முகவரியிலிருந்தே அனுப்பப்படும்.


மேலும் xxxx@who.com என்ற முகவரியோ xxxx@who.org என்று முடியும் மெயில் முகவரியிலிருந்தோ அனுப்பப்படமாட்டாது. 


சில நேரங்களில் ஹேக்கர்கள் xxxxx@who.int என முடியும் முகவரியிலிருந்து கூட Spam மெயில்களை அனுப்பலாம்.


அதனால் எந்த ஒரு மெயில் அனுப்பட்டாலும், who.int என்ற இணையதள முகவரிக்கு வெளியே இருக்கும் எந்த லிங்கையும் கிளிக் செய்ய சொல்லி உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடாது.


மேலும் பொதுமக்கள்  மற்றும் நன்கொடையாளர்களின் User Name, Password போன்ற விவரங்களையும் உலக சுகாதார அமைப்பு கேட்காது.


ஒரு வேளை தவறுதலாக Spam மெயில்களுக்கு நீங்கள் பதில் அளித்துவிட்டால் என்ன செய்வது? 


WHO பெயரை பயன்படுத்தி வரும் ஸ்பேம் மெயில்களுக்கு பதில் அளித்துவிட்டாலோ அல்லது உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை user name & Password அளித்துவிட்டாலோ அதைப்பற்றி பதட்டம் அடைய வேண்டாம். நீங்கள் பதட்டமான மனநிலையில் இருந்தால் அதற்கு அடுத்து எடுக்க வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க முடியாமல் போகலாம்.


இதனால் பதட்டமும் பயமும் கொள்ளாமல் www.who.int என்ற இணையதளத்தில் இருக்கும் Report Spam (மோசடி குறித்து புகாரளிக்கவும்) என்ற பெயரில் இருக்கும் ( https://www.who.int/about/report_scam/en/ ) இந்த லிங்கை கிளிக் செய்தோ அல்லது Contact Who (உலக சுகாதார அமைப்பை தொடர்பு கொள்ளவும்) என்ற பெயரில் இருக்கும் ( https://www.who.int/about/who-we-are/contact-us ) இந்த லிங்கை கிளிக் செய்தோ உங்களுடைய புகாரை பதிவு செய்யலாம்.


இதற்கான நடவடிக்கையையும் WHO மூலம் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 


WHO அமைப்பின் பெயரில் நடக்கும் மோசடியில் இருந்து தப்புவது எப்படி?


1. உங்களுக்கு வரும் மெயில் xxxx@who.int என்று முடியும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து வருகிறதா என்பதை ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்துக்கொள்ளவும். 


2. நீங்கள் கிளிக் செய்யும் இணையதளத்தின் லிங்க் ‘https://www.who.int’ என்று இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும். நீங்கள் நேரடியாக ‘https://www.who.int’ என்று தேடுதளத்தில் டைப் செய்து உலக சுகாதார அமைப்பின் இணையதளத்திற்குள் நுழைவது நல்லது. 


3. யாரேனும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை (Username & Password) கேட்டால், அவர்களுக்கு உங்களுடைய விவரங்கள் எதற்கு என்பதை சிந்தியுங்கள். பொதுவான காரியங்களுக்கு தனிப்பட்ட நபர்களின் இரகசிய விவரங்கள் தேவையில்லை.


4. சைபர் குற்றவாளிகள் உங்களை அவசரப்படுத்தி, நிதானம் இழக்க செய்து அதன் மூலம் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்த முயலுவர். அதனால் உங்களுக்கு சிந்திக்கும் நேரத்தை அவர்கள் வழங்க மாட்டார்கள். அதற்கு கொரோனா வைரஸ் அவசர நிலையையும் ஒரு யுக்தியாக பயன்படுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆன்லைனில் செயல்படும்போதும், பிற மெயில்களுக்கு பதில் அளிக்கும்போதும் நிதானமாக யோசித்து செயல்படவும்.


5. சைபர் குற்றவாளிகளிடம் உங்களுடைய இரகசிய தகவல்களான User Name & Password களை தவறுதலாக அளித்திருந்தால், உடனடியாக User Name & Password களை மாற்றிவிடவும். Password களை உடனடியாக மாற்றுவது மிகவும் நல்லது. 


6. மோசடி நடந்திருப்பதை உணர்ந்தீர்களானால் உடனடியாக அது குறித்து ( https://www.who.int/about/report_scam/en/ ) இந்த லிங்கை கிளிக் செய்து தெரியபடுத்தவும்.