பேருந்துகளை இயக்குவது பற்றி வழகாட்டுதல்கள் வழங்கப்படவில்லை - ஆம்னி உரிமையாளர்கள் சங்கம்

ஊரடங்குக்குப் பிறகு ஆம்னி பேருந்துகளை இயக்குவது பற்றி மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து எவ்வித வழிகாட்டுதலும் இல்லை என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 144 தடை உத்தரவுக்குப் பிறகு ஆம்னி பேருந்து தொழில் சார்ந்த ஒரு லட்சம் தொழிலாளர்களும் ஆயிரம் பேருந்து உரிமையாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.


எங்களது ஆம்னி பேருந்து தொழில் சார்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு பல கோரிக்கைகள் வைத்துள்ளோம். கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை. ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு ஆம்னி பேருந்துகளை இயக்குவது சம்பந்தமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிப்போ வழிகாட்டு நெறிமுறைகளோ இதுவரை கொடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இது சம்பந்தமான வழிகாட்டுதல்கள் வந்த பிறகு ஆம்னி பேருந்து கட்டணம் சம்பந்தமாக முடிவு எடுக்கப்படும்.


தற்பொழுது ஆம்னி பேருந்தில் எவ்வித கட்டண உயர்வும் இல்லை என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பொதுச் செயலாளர் அன்பழகன் கூறினார்.